2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததன் பின்னணி இதுதான்!

தமிழகத்தில் உள்ள 2931 பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற செய்தி, அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கான பெரும் நிதி ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும், கள நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதன் அப்பட்டமான சான்றாக அமைந்துள்ளது. பள்ளிகள் மட்டுமல்லாது, பெரும்பாலான அரசு அலுவலகக் கட்டிடங்களிலேயே கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லாத அல்லது மிக மோசமான நிலையில் உள்ள அவலநிலை உண்மையே. அதிகாரிகளுக்கு மட்டும் சற்றேனும் மேம்பட்ட வசதிகள் இருக்கும் நிலையில், பொதுவான அலுவலர்கள் கேன் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை அன்றாடமாகிவிட்டது.
பள்ளிக் கல்வித் துறைக்காக கடந்த ஆண்டு மட்டும் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் இந்த நிலை ஏன் தொடர்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த நிதியின் பெரும்பகுதி ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளுக்கே போய்விடுகிறது என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசின் சொந்த நிதியைத் தாண்டி, நபார்டு வங்கி போன்ற பல்வேறு அமைப்புகளிடமிருந்து ஏராளமான நன்கொடைகள் வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நிதிகள் எப்படி செலவழிக்கப்படுகின்றன, அவை என்ன மாற்றத்தை உருவாக்குகின்றன அல்லது ஏன் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன என்பதே நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.
விளக்கமாக சொல்வதானால் , 1998 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நபார்டு வங்கி தமிழகப் பள்ளிகளுக்கு வகுப்பறைக் கட்டிடங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஒரே நேரத்தில் கட்டுவதற்காக பெரும் நிதியை வழங்கி வருகிறது. இந்த நிதி மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, பொதுப்பணித்துறையின் மூலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் செலவினக் கணக்கை அனுப்பி பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது பல கட்டங்களாக நடந்துள்ளது; ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 பள்ளிகளில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் 2 வகுப்பறைகள், 2 கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இவை திட்டமிட்டபடி நடந்திருந்தால், கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர்கள் இல்லாத பள்ளிகளே அருகியிருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தத் திட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணங்கள் இரண்டாகப் பிரிக்கலாம்:
முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் தயாரிக்கப்படும் திட்ட மதிப்பீடுகள், ஒப்பந்தப்புள்ளி ஏலத்திற்கு வரும்போது அந்த ஆண்டின் பெரும்பகுதி முடிந்துவிடுகிறது. இதனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து, ஒப்பந்தக்காரர்கள் கோரும் ‘டெண்டர் எக்ஸஸ்’ (Tender Excess) எனப்படும் கூடுதல் சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், ஒரு பள்ளிக்கான செலவு அதன் மதிப்பீட்டை விட அதிகமாகி, போதிய நிதி இல்லாத நிலை ஏற்படுகிறது.
இரண்டாவது மற்றும் மிக முக்கியமான காரணம், ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கணிசமான தொகையைச் செலவழிக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தப் புள்ளியைப் பெறுவதற்கே ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிலை, 70களிலிருந்தே நடைமுறையில் உள்ள ஒரு “ஓப்பன் சீக்ரெட்”. இன்று இந்த வழக்கம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை (கிட்டத்தட்ட 15-20%) கொடுக்காமல் பணி பெற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளது. இத்துடன் ‘டெண்டர் எக்ஸஸ்’ தொகையையும் சேர்த்தால், ஒரு பணியின் மதிப்பீட்டில் சுமார் 25% இந்தச் செலவினங்களுக்காகவே போய்விடுகிறது. நீராதாரத் துறையில் இது 40% வரை செல்லும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சதவீதக் கணக்கு இழுபறியின் காரணமாக, ஒப்பந்தம் அந்த நிதியாண்டுக்குள் முடிவடைவதில்லை. இவ்வளவு செலவழித்து, பழைய மதிப்பீட்டின்படி பணியைச் செய்ய ஒப்பந்தக்காரர்களால் இயலாது. இதனால் புதிய நிதியாண்டில் திருத்திய மதிப்பீடு போடப்படும். ஆனால், நபார்டு வங்கி ஏற்கனவே நிர்ணயித்து வழங்கிய தொகையை மாற்ற முடியாததால், திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் டெண்டர் கோரப்படும். சில கடினமான இடங்களில் 7, 8 முறை கூட டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அந்த மதிப்பீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியையும் சுருக்கிக் கொள்வார்கள் அல்லது வெட்டி விடுவார்கள். முதலில் சுற்றுச் சுவர், பிறகு குடிநீர் வழங்கல், அதன்பின் கழிப்பறைகள் என ஒவ்வொரு வசதியாகக் குறைக்கப்பட்டு, கடைசியில் வெறும் 2 வகுப்பறைகள் கட்டுவதோடு பணி முடிந்துவிடுகிறது. அப்படியே கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் கட்டப்பட்டாலும், அதன் ஆரம்பச் செலவு 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்ந்து விடுகிறது. ஆக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 10 பள்ளிகளில் நடக்க வேண்டிய பணிகள் 6 அல்லது 7 பள்ளிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, மற்ற பள்ளிகள் அடுத்த நிதி ஒதுக்கீட்டுக்காகக் காத்திருக்க வேண்டியதாகிறது.
ஒப்பந்தக்காரர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு மேற்கொள்ளும் இந்தப் பணியின் தரம் எப்படியிருக்கும் என்பதை நாம் யூகிக்கலாம். இதனால் தான் கூரைகள் இடிந்து விழுவதும், போதுமான வகுப்பறைகள் இல்லாததும், கழிப்பறைகள் இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாததும், குடிநீர் வசதி அற்ற நிலையும் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் காணும் அவலங்களாக மாறிவிட்டன.
ஒரு ஆறுதல் என்னவென்றால், உண்மையாகச் செலவாவதைக் காட்டிலும் 50% அதிகம் செலவழித்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், ஒரு அடிப்படைத் தரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. கட்டிடப் பணிகளில் கொடுத்த காசுக்கு ஒரு கட்டிடத்தைக் கட்டி காண்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், நீராதாரத் துறையில் இந்தக் கட்டுப்பாடு இல்லை; புல் பிடுங்கினோம், சுத்தம் செய்தோம், கரையை உயர்த்தினோம், தூர் வாரினோம் என்று கணக்கில் பதிந்து பட்டியல் போட்டுத் தொகையைச் செலவழிப்பது எளிது. பாதிக்குப் பாதி பணி நடந்தாலே அது பெரிய விஷயம். ஆற்றில், ஓடைகளில், கால்வாய்களில் நீர் வந்துவிட்டால் யார் எதை ஆய்வு செய்ய முடியும்?
இன்றைய செய்தியில், 2931 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லை என்று வந்திருப்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இவைதான். அரசின் நிதி ஒதுக்கீடுகள் இருந்தும், அவை முறையாக மக்களைச் சென்றடையாமல், ஊழல் மற்றும் முறைகேடுகளால் திசை திருப்பப்படுவது வேதனைக்குரியது. இந்த ஆழமான சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல், கல்வித் தரத்தில் நாம் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதுடன், அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை தொடரும்.