ராகுல் மீதான flying kiss குற்றச்சாட்டு சுமக்கும் செய்தி இதுதான்!

மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாட்டு மக்களின் சமூக வலைத்தள உரையாடலில் முக்கியமாக இடம் பெறுவது அந்தந்தத் தலைவர்களை மோடி அணைக்கும் விதமும் கைகுலுக்கும் விதமும் இன்று வரை அயல்நாட்டு ஊடகங்களின் அலசப்படும் செய்தியாக்கும்.
Bear Hug எனச் சொல்லப்படுகிற கரடி பாணி அணைப்பையே பிற நாட்டுத் தலைவர்களுக்கு அளிப்பார். மோடியின் அணைப்பை பல சர்வதேச ஊடகங்கள் கிண்டல் செய்திருக்கின்றன. அழுத்தமாக அவர் குலுக்கும்போது அடுத்த நபரின் கையில் அச்சுப் பதிவதை எல்லாம் புகைப்படக்காரர்கள் படமெடுத்துக் கிண்டல் செய்திருக்கின்றனர். இத்தனை விமர்சனமும் கிண்டலும் வந்தாலும் மோடி இதைத் தொடர்கிறார். அடிப்படைக் காரணம் என்னவென்றால், உடல்மொழி சார்ந்த ஆய்வுகளின்படி, ஒரு தலைவன் தன்னுடைய அதிகாரத்தை உடல்ரீதியாக வெளிப்படுத்துவதில் இருந்து தன் ஆளுமையைத் தொடங்குகிறான் என்பார்கள்.
சிலருக்குப் பண்பட்ட வகையில் அந்த உடல்மொழி வெளிப்படும். ஒபாமா, ஜஸ்டின் ட்ரூடோ போன்றோர் அந்த ரகம். அது அடிப்படையில் இல்லாமல், கற்றுக் கொண்டு செயல்படுத்த விரும்புபவர்கள் ட்ரம்ப், ஜோ பிடன் மற்றும் மோடி போல் வெளிப்படுத்துவார்கள். ட்ரம்ப்பை மோடி அமெரிக்காவில் சந்தித்தபோது வெளிப்பட்ட உடல்மொழி ஆகச் சிறந்த ஆளுமைப் போட்டி நகைச்சுவை. ‘கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் முசோலினியைப் பார்த்து அஞ்சி ஹிட்லர் தன் ஆளுமையைக் காட்டவென உயரமான சேரில் அமர்வது, முன்னால் நடந்து செல்வது போன்ற சில்லரைத்தனங்களைச் செய்வதைப் போலவே வெளிப்பட்டிருக்கும்.
மோடியின் தோளில் ட்ரம்ப் கை போடுவார். உடனே அதைச் சிரித்தபடி தள்ளி மோடி அவரின் இடுப்பில் கை வைத்து அணைப்பார். அமர்ந்திருக்கும் போது மோடியைக் கை நீட்டி ட்ரம்ப் தட்டிக் கொடுப்பார். உடனே மோடி ட்ரம்ப்பின் கையைப் பிடித்துச் சிரித்தபடி ஓங்கிப் பட்பட்டென அடிப்பார். தலைவர்களிடம் மட்டுமல்ல, மோடி குழந்தைகளிடம் கூட அதிகாரத்தையும் ஆளுமையையும் நிரூபிக்க முயலுபவர். காதைத் திருகுவார். தலையில் கொட்டுவார். சனாதனம் அதுதான். எவரையும் சமமாக அது பாவிக்காது. வாய்ப்புக் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அது தன்னுடைய அதிகாரத்தை வலுக்கட்டாயமாக நிறுவும். வல்லுறவையும் அரசியல் ஆயுதமாக்க வேண்டுமெனச் சொன்னவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு ஒரு முத்தம் மனதுக்குள் ஏற்படுத்தும் கனிவான ஈரம் பற்றித் தெரியாது.
ராகுல், flying Kiss கொடுத்தாரா இல்லையா என்பதை விட, ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அது சர்ச்சையாக்கப்படும் விதம்தான் இவர்களின் அரசியலுக்கான உரைகல்லாக இருக்கிறது.
“பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை. நான் சென்றேன். கொல்லப்பட்ட மகனின் உடலுடன் அமர்ந்திருக்கும் ஒரு தாயைப் பார்த்தேன். பாதிக்கப் பட்ட பெண்களைச் சந்தித்தேன். மணிப்பூர் என நான் சொன்னாலும் அது இன்று மணிப்பூராக இல்லை. மணிப்பூர் இரண்டாக இருக்கிறது. இவர்களின் அரசியலால் அதைப் பிரித்து விட்டார்கள். மணிப்பூரில் இருந்த இந்தியத் தன்மையைக் கொன்று விட்டார்கள். இவர்கள் இந்தியாவைக் கொன்று விட்டார்கள்.”
ராகுல் மீதான flying kiss குற்றச்சாட்டு சுமக்கும் செய்தி இதுதான்.
இச்செய்தியை மறைக்கவும், மேலும் பரவ விடாமல் தடுக்கவும்தான் சங்கிகள், பறக்கும் முத்தச் செய்தியைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வல்லுறவை அரசியல் ஆயுதமாக்கும் கூட்டத்துக்கு முத்தம் கொடுக்கும் உத்தரவாதமும், அணைப்பு கொடுக்கும் ஆதரவும், கைகோர்ப்பு கொடுக்கும் நம்பிக்கையும், காதல் கொடுக்கும் ஆழ்தலும், பறக்கும் முத்தத்தின் எல்லையற்ற அன்பும் நிச்சயமாகத் தெரியாது; தெரியப் போவதுமில்லை. கேள்வி ஒன்றுதான்:
“மோடி ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை?”