தேவர் மகன் Vs மாமன்னன்!

தேவர் மகன் Vs மாமன்னன்!

மிக நேரடியாக மாரி செல்வராஜிடம் வைக்க வேண்டிய கேள்வியொன்று இருக்கிறது. முதலில், திரைப்படங்களுக்கு உள்ளே/ வெளியே கட்டமைக்கப் பட்ட பகைப்புலங்கள் பற்றி கொஞ்சம் பார்த்து விடலாம். ஜாதியை க்ளோரிஃபை செய்யும் படங்களும் பாடல்களும் நாயக வழிபாட்டுடன் வந்த போது, அதை முன்னிறுத்தி எல்லா இடங்களிலும் கலவரம் நடக்கவில்லை என்பதை முதலில் பதிவு செய்ய வேண்டும். சூர்ய வம்சம், சின்னக் கவுண்டர், எஜமான் மறுமலர்ச்சி, பசும்பொன், சண்டக்கோழி வரை வரிசையாய் படங்கள் வந்தன.

‘எஜமான் காலடி மண்ணெடுத்து'(இசைஞானி),
‘புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்'(எஸ்ஏ ராஜ்குமார்)
‘தென்னாட்டு சிங்கமே தேவரே’ (வித்யாசாகர்) என்று பாடல்களும் வந்தன.

ஜாதி மோதல்களுக்கு இந்தப் பாடல்களைக் காரணம் காட்டி யாரும் முரட்டடி அடிக்கவில்லை. ஆனால், தேவர் மகன் படத்தில் வந்த போற்றிப் பாடடி பொண்ணே பாடல் தான், கிருஷ்ணசாமியால் கடும் எதிர்ப்புக்கு ஆளானது.

“..தெக்கு தெச ஆண்ட மன்னர் இனம் தான் ஹோய் .!
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்..! என்று தெற்கில் அவர்கள் மொழியில் அன்றாடம் புழங்கிக் கொண்டிருந்த பெருமிதத்தை வாலி எழுதிப் பார்த்ததற்கு தனி காரணமுண்டு.

எது எவ்வாறாயினும், பாண்டிய ஆண்ட பரம்பரைக் கதைகளில் புகைந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி வகையறாக்களை இது செம கடுப்பேற்றியது. இந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இவர்கள் டென்ஷனாவதை முக்குலத்து ஆட்டக்காரர்களும் குறித்துக் கொண்டனர். இதனாலேயே முட்டல்களும் மோதல்களும் விளைந்தன. உண்மையில், மிக நேரடியாக திரையில் தேவர் புகழ் பாடும் வேறு பல ஹிட் பாடல்கள் இருந்தும், போற்றிப் பாடடி பாடலுக்கு எழுந்த மிகை எதிர்ப்பே, அப்பாடல் திரும்பத் திரும்ப ஒலிக்கவும் காரணமாகியது.

தேவர் மகன், விருமாண்டி (சண்டியர்) என்று அடுத்தடுத்து ரஹ்ஹட் நாயகனாக; முக்குலத்து ஆதரவை திரட்டிக் கொண்டதன் நில்லாமல், உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம், தாசாவதாரம் என்று, சனாதன சாய்வு நோக்கிலும் கமல்ஹாசன் படங்களைத் தந்தார். ஆண்ட பரம்பரை /ஷத்திரியம் என்பது, சனாதன பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அடியாள் அடுக்கு என்கிற பார்வை வாலியிடம் இருந்தது. எனவே, போற்றிப் பாடடி பொண்ணே- வந்தது.

சரி. இந்தப் பதிவின் துவக்கத்தில் தொட்டுக் கொண்ட பிரச்சினைக்கு வருவோம்.

கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்த்த தேவர் மகன் படத்தை, மாரி செல்வராஜூம் இன்று வரை விமர்சிக்கிறார். தேவர் மகனின் இசக்கிதான் ஒடுக்கப்பட்ட குடும்பர் என்கிற பார்வையில், இசக்கியை மாமன்னனாக்கி கமலுக்கு மாரி பதிலடி தருகிறார்; நல்லது. ஆனால், அதே கிருஷ்ணசாமி முன்னெடுக்கின்ற ஆர்எஸ்எஸ் – சனாதன பாதுகாப்பு அரசியலை, ஏன் மாரி செல்வராஜால் விமர்சிக்க முடியவில்லை.? தேவர்களுக்கு தலைவன் தேவேந்திரன் எனும் ஆதிக்கப் போட்டியில், தெக்கு தெச ஆண்ட மன்னனுக்கு எதிரில் மாமன்னனாக இசக்கி நிற்கட்டும் ; பிழையில்லை.

ஆனால், சனாதன அடுக்கை வலிமைப்படுத்த கமல்ஹாசன் கொம்பு சீவி விட்ட வேலையை, எஸ்சி இழிவு என்று தூண்டி விட்டு வேறொரு வடிவத்தில் கிருஷ்ணசாமி செய்கிறாரே அதற்கு மாரி எப்போது பதிலடி தரப்போகிறார்.? ஒட்டுமொத்த தேவர் மகன் படக்குழுவில், பாடலுக்கு மெட்டு கொடுத்த இசைஞானியை தேர்ந்தெடுத்து குறி வைப்பதில் ஆர்வங்காட்டும் பெரியார் லூசன்களை, மாரி வைப்ரேட் ஆக்கியிருப்பதால் இந்தக் கேள்விகளும் தவிர்க்க இயலாததாகி விட்டதை, சொல்லி வைப்போம்.

ஜீவகன்

Related Posts