தெருநாய் பிரச்னைகளுக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது!
தெருநாய்களுக்கு ஆதரவாகவும் எதிராகவுமான இருதரப்பு விவாதங்கள்தான் இப்போது படுசூடாகிவருகின்றன. எதிரானவர்களின் இந்தக் கோபம், ஊழலுக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் இருந்திருக்குமேயானால், இந்தியா எவரெஸ்ட்டை விடவும் உயர்ந்திருக்கும். அங்கெல்லாம் நம் ‘பாச்சா’ பலிக்காது என்பதால்தான் தெருநாய்களின்மேல் பாய்கிறோம். இவர்களின் கோபமும் அப்பிராணிகளாகச் சுற்றித் திரியும் பிராணிகளான தெருநாய்களின் மேலல்ல; அவற்றுக் கிடையே ஊடாடித் திரியும் ஆபத்தான சொறி நாய்களின் மேலும் வெறி நாய்களின் மேலும்தான் என்பதே உண்மை. சரி, இந்த நாய்களை என்ன செய்வது? அழிப்பதா, அகற்றுவதா? ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று மதம் பிடித்த யானையிடம் அன்பு காட்டிய மகாகவி பாரதி என்னவானான் என்பதை அனைவரும் அறிவோம். ‘உன்னைக் கொல்ல வருகின்ற பசுவை நீ கொன்றுவிடு’ என்று சொன்னவர் யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர். மதத்தை அரசியலாக்காத நிஜமான இந்து. அவரே அப்படிச் சொன்ன பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்? இதுதான் இன்றைய கேள்வி.
எல்லா விலங்குகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தாக்குதலில் ஈடுபடுகின்றன. இது ஆரோக்கியமான தெரு நாய்களுக்குச் சரி. சொறி நாய்களுக்கும் வெறி நாய்களுக்கும் இது சற்றும் பொருந்தாது. பெரியவர்களால் இந்த நாய்களை ஓரளவுக்காவது அடையாளம் கண்டு சென்றுவிட முடியும். ஆனால் குழந்தைகள்? அதனால்தான் அதிக அளவில் அவர்கள் பலியாகிறார்கள். எழுபதுகளின் இறுதியில் நான் தனிமரமாகச் சென்னை வந்தபோது, குடியேறிய இடம் திருவல்லிக்கேணி. அப்போதெல்லாம் சென்னையில் கறவை மாடுகள் நடமாடாத தெருக்களே இருக்காது. அவை திருவல்லிக்கேணியில் மிகவும் அதிகம். வீட்டுக்கு வீடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தித்தான் பால் கறந்து கொடுப்பார்கள். அதனால், வாகனங்களோடு வாகனங்களாக மாடுகளும் பயணிக்கும். அவை முட்டாது என்றாலும் நம்மை இடித்துத் தள்ளிவிடாமல் பார்த்துப் பார்த்து நடப்பதே பெரும்பாடு. கூடவே தெரு நாய்களும்.

மாடுகள் மட்டுமா? சாக்கடைகள் தோறும் பன்றிகளும் மேய்ந்து கொண்டிருக்கும். நகரம் வளர்ந்த காரணத்தால், இரண்டுமே விரைவில் அகற்றப்பட்டு விட்டன. மாடுகளும் பன்றிகளும் மனிதர்களால் வளர்க்கப் பட்டதால் முழுமையாக அகற்றப் பட்டன. தெருநாய்கள் அப்படியல்ல. அவற்றை யாரும் வளர்க்காததால், யாருக்கு உத்தரவு போட்டு அகற்ற முடியும்? இதுதான் இன்றைய பிரச்னை. தெருநாய்களை யாரும் ஒழிக்கச் சொல்லவில்லை. அகற்றத்தான் சொல்கிறார்கள்.
சரி, கண்ணில் படும் அத்தனை தெரு நாய்களையும் பிடித்துக் கொண்டுபோய் கண்காணாத இடத்தில் ஒரு காப்பகம் அமைத்து அடைத்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியும் சில நாய்கள் தப்பித்து நகரில் திரியவே செய்யும். அவற்றால் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்யும். சரி, என்னதான் செய்வது? ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதைக் கடைப்பிடித்தால் மட்டும்தான் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலாக ஒழிக்க முடியும். எப்படி என்கிறீர்களா?
தெருநாய்களின் தாய்மடி எது? ஆங்காங்கே தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள்தான். அவற்றில் கொட்டப்படும் அழுகிப்போனவற்றையும் மிச்சம் மீதி உணவுப் பொருள்களையும் தின்றுதான் அவை உயிர் வாழ்கின்றன. அவை கிடைக்காவிட்டால்? இது என்ன அபத்தம்? மக்கள் குப்பைகளை எங்கே கொண்டுபோய்க் கொட்டுவார்கள் என்று கோபப்படுகிறீர்களா? பெரும்பாலான மக்களின் எண்ணம் என்ன தெரியுமா? தெரு எக்கேடு கெட்டால் என்ன? நம் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்பதுதான். அதனால்தான் கெட்டுப்போன அல்லது மிச்சம் மீதி உணவுப் பொருள் உள்பட எல்லாவற்றையும் உடனுக்குடன் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் கொட்டி விடுகிறார்கள். அதற்காகத்தான் தெரு நாய்கள் அங்கங்கே காத்துக் கிடக்கின்றன. முதலில் இது தவிர்க்கப்பட வேண்டும்.
அப்புறம்? ஒருநாள் குப்பை முழுவதையும் வீட்டிலேயே சேகரித்து வைக்க வேண்டும். மறுநாள் தூய்மைப் பணியாளர்கள் வரும்போது அவர்களின் கையில்தான் அதைக் கொடுக்க வேண்டும். அப்பணியாளர்களும் நாள்தவறாமல் வந்து அவற்றைப் பெற்று, குப்பை லாரிகளில் எடுத்துச் செல்ல வேண்டும். இதை அரசுதான் கண்கொத்திப் பாம்பாக இருந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், நம்முடைய அரசு என்ன செய்கிறது? நோய்கள் வராமலும் தவறி வரும் நோய்கள் பரவாமலும் தடுக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணிகளை மதிப்பதாகவே தெரியவில்லை. மக்களின் ஆரோக்கியத்திற்கு தூய்மையான தெருக்கள்தான் முதல்படி என்பதையும் அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசு, மருத்துவமனைகளில் காட்டும் அதே அக்கறையை நோய்கள் வராமல் தடுக்கும் தெருக்களின் தூய்மையிலும் காட்ட வேண்டும். மருத்துவர்களின்மேல் காட்டும் அதே அக்கறையைத் தூய்மைப் பணியாளர்களின் மேலும் காட்ட வேண்டும்.
இவற்றிலெல்லாம் அரசு அக்கறை காட்டும் போதுதான் – பொதுமக்களும் தங்கள் போராட்டத்தின்மூலம் அரசை வற்புறுத்தும் போதுதான் தெருநாய்களின் தொல்லைகள் உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாகவாவது குறையும் என்பதில் ஐயமேயில்லை. இதெல்லாம் நடக்குமா? மன்னிக்கவும். இது ஜனநாயக நாடு. எனவே, ஏழை சொல் அம்பலமேறாது!


