தி.மு.க முதன்மை அணியாகச் செயல்படும் இளைஞரணி உதயமான நாள்!

தி.மு.க முதன்மை அணியாகச் செயல்படும் இளைஞரணி உதயமான நாள்!

ன்று ஜூலை 20, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) முதன்மை அணியாகச் செயல்படும் இளைஞரணி உதயமான நாள்! 1980 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, அன்றைய ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ என்ற அமைப்பாகத் தொடங்கப்பட்டதே, இன்று நாம் காணும் தி.மு.க-வின் பலம் வாய்ந்த இளைஞரணியாக உருவெடுத்தது. தி.மு.க-வின் தற்போதைய தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னாட்களில் இளைஞரணியின் செயல்வன்மை மிகுந்த நிர்வாகிகளால் கழகத்தின் மிக முக்கிய அங்கமாக மாறியது. இந்திய அரசியலில் ஒரு மாநிலக் கட்சி தொடங்கிய முதல் இளைஞரணி என்ற பெருமையையும் தி.மு.க இளைஞரணி பெறுகிறது.

மு.க.ஸ்டாலின் அரசியல் பயணம் இந்த இளைஞரணியுடனேயே நெருங்கிய தொடர்புடையது. 1981 ஆம் ஆண்டில், இளைஞரணி அமைப்பாளர்கள் ஐந்து பேரில் ஒருவராக அவர் பொறுப்பேற்றார். பின்னர், 1982 ஆம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், கழக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று, கழகத்தின் கொள்கைகளையும், நோக்கங்களையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றினார்.

அன்பகத்தை இளைஞரணியின் தலைமை அலுவலகமாக்கிய செயல்பாடு:

கழகத்தின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வந்த அன்பகம் கட்டிடத்தை, இளைஞரணியின் அலுவலகமாகப் பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி, அதனை அன்றைய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனிடம் வழங்கி, அன்பகத்தை இளைஞரணியின் தலைமை அலுவலகமாக்கினார். இது இளைஞரணிக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியது.

போராட்டக் களத்தில் இளைஞரணியின் பங்கு:

தி.மு.க எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட காலகட்டங்களில், தலைவர் கலைஞர் அறிவித்த பல போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் இளைஞரணிக்கு முக்கியப் பங்கு உண்டு. இலங்கைத் தமிழர் நலன் காக்கும் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டம் ஆகியவற்றுக்காக இளைஞரணியினர் பெருமளவில் திரண்டு போராட்டம், மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றனர்.

போராட்டங்களின் ஒரு வடிவமான ஊர்வலம் என்ற சொல் மாறி, பேரணி என்ற சொல் நடைமுறைக்கு வந்ததற்குக் காரணம், கழக இளைஞரணியின் இராணுவ மிடுக்கு போன்ற அணிவகுப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

46 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமையாகச் செயல்பட்டு வரும் தி.மு.க இளைஞரணி, இந்தியாவில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான இளைஞரணியைப் பெற்றிருக்கும் ஒரு பேரியக்கமாகத் திகழ்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

 

Related Posts