இந்திய சுகாதாரத்துறையின் பலவீனம்: பெண் மருத்துவர்களின் இடைநிற்றலும் தீர்வுகளும்

இந்திய சுகாதாரத்துறையின் பலவீனம்: பெண் மருத்துவர்களின் இடைநிற்றலும் தீர்வுகளும்

ந்திய மருத்துவக் கல்லூரிகளில் நுழையும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆனால், நிபுணத்துவ சிகிச்சை அளிக்கும் களத்தில் இவர்களின் எண்ணிக்கை பாதியாகச் சுருங்குகிறது. BCG மற்றும் Dasra அமைப்பின் அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த “Quiet Workforce Gap” என்பது இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பில் விழுந்திருக்கும் ஒரு பெரும் விரிசல்.

சவால்களின் முக்கோணம்

பெண் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை மூன்று முக்கிய அடுக்குகளாகப் பிரிக்கலாம்:

  1. உயிரியல் மற்றும் சமூக அழுத்தம்: ஒரு மருத்துவர் தனது நிபுணத்துவத்தை (Specialization) அடையும் காலம், அவரது திருமண மற்றும் மகப்பேறு காலத்தோடு ஒத்துப் போகிறது. 28-32 வயதிற்குள் PG முடிப்பது, குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில் பெரும் போராட்டமாக மாறுகிறது.

  1. துறைசார்ந்த பாகுபாடு: கார்டியாலஜி, ஆர்த்தோ போன்ற துறைகளில் “ஆண்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்” என்ற மறைமுக பிம்பம் இன்றும் உள்ளது. 30% பெண்கள் விலகும் அதே வேளையில், ஆண்கள் 5-10% மட்டுமே விலகுவது இந்தச் சூழல் அழுத்தத்தையே காட்டுகிறது.

  2. கட்டமைப்பு குறைபாடு: பல மருத்துவமனைகளில் மகப்பேறு விடுப்புக்கு பிந்தைய ‘Work-Life Balance’ என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

பொருளாதார மற்றும் சமூக இழப்பு

இந்தியா 8 லட்சம் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற ஒரு பெண் மருத்துவர் பணியை விடுவது என்பது, அரசு அல்லது அவர் குடும்பம் செலவழித்த பல லட்சக்கணக்கான ரூபாய்களும், பல ஆண்டுகால உழைப்பும் வீணாவதாகும். இவர்களைத் தக்கவைப்பதன் மூலம் சுமார் 1.7 லட்சம் கூடுதல் நிபுணர்களை உடனடியாகப் பெற முடியும்.

மாற்றத்திற்கான தீர்வுகள்: வெறும் காகிதத்தோடு நிற்காமல்…

டாடா மெமோரியல் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் போன்ற நிறுவனங்கள் காட்டும் வழிமுறை மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்:

  • கட்டாயக் காப்பகங்கள்: ஒவ்வொரு பெரிய மருத்துவமனையிலும் தரமான குழந்தைகள் காப்பகம் (Creche) இருப்பது சட்டமாக்கப்பட வேண்டும்.

  • மீள்-நுழைவுப் பாலங்கள் (Bridge Programs): 2 அல்லது 3 ஆண்டுகள் இடைவெளி எடுத்த மருத்துவர்கள், தயக்கமின்றி மீண்டும் பணியில் சேர ‘Refresher Courses’ அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  • தொலைதூர மருத்துவம் (Tele-medicine): களப்பணிக்கு வர முடியாத சூழலில் இருக்கும் பெண் மருத்துவர்களைத் தொழில்நுட்பம் வாயிலாக ஆலோசனைகள் வழங்கப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் பெண் மருத்துவர்களின் அர்ப்பணிப்பில் எந்தக் குறையும் இல்லை; அவர்களைத் தாங்கும் அமைப்பில்தான் (System) குறை உள்ளது. பெண் மருத்துவர்கள் பணியைத் தொடர்வது என்பது அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அது இந்திய மக்களின் உயிர் காக்க எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சுகாதார முதலீடு.

தமிழ் செல்வி

Related Posts

error: Content is protected !!