குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் இந்த திடீர் ராஜினாமா, துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு புதிய தேர்தல் நடத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் அட்டவணை:

  • அறிவிக்கை வெளியிடும் நாள்: ஆகஸ்ட் 7, 2025
  • வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்: ஆகஸ்ட் 7, 2025
  • வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 21, 2025
  • வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஆகஸ்ட் 22, 2025
  • வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 25, 2025
  • தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை: செப்டம்பர் 9, 2025

துணை குடியரசுத் தலைவர் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவால் நடத்தப்படுகிறது. புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், துணை குடியரசுத் தலைவர் பதவியின் பொறுப்புகளை கவனிப்பார்.

அடிசினல் ரிப்போர்ட்:

தேர்தலில் வாக்களிப்பவர்கள் யார்?

துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் குழுவில் (Electoral College) பின்வருபவர்கள் இடம்பெறுகின்றனர்:

  • மக்களவை (Lok Sabha) உறுப்பினர்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்கள்.
  • மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்கள்.

முக்கிய வேறுபாடுகள்:

  • மாநிலங்களின் பங்கு: குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். ஆனால், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
  • நியமன உறுப்பினர்கள்: குடியரசுத் தலைவர் தேர்தலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆனால், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள்.

தேர்தல் முறை:

துணை குடியரசுத் தலைவர் தேர்தல், “ஒற்றை மாற்று வாக்கு முறை” (Proportional Representation by means of a single transferable vote) மற்றும் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுகிறது. இந்த முறையில், வாக்காளர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய வேட்பாளர்களை வரிசைப்படுத்துவார்கள் (உதாரணமாக, முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம் போன்றவை).

தேர்தலை நடத்துவது யார்?

இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ், துணை குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரையும் (Returning Officer) நியமிக்கிறது. பொதுவாக, மக்களவை அல்லது மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் (Secretary General) தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்படுவார்.

வேட்பாளருக்கான தகுதிகள்:

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் லாபம் தரும் பதவியில் (Office of Profit) இருக்கக் கூடாது.

ஒரு வேட்பாளர், குறைந்தது 20 வாக்காளர்களால் முன்மொழியப்பட வேண்டும், மற்றும் 20 வாக்காளர்களால் வழிமொழியப்பட வேண்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!