அன்டோனியோ குட்ரேஸ் ஐ.நாவின் 9வது பொதுச்செயலாளர் பொறுப்பேற்றார்!

உலக நாடுகள் அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளராக பான் கி மூன் இருந்தார். அவரது பதவிக்காலம் நேற்று முன்தினம் (டிச31) முடிவடைந்ததைத்தொடர்ந்து புதிய செயலாளரராக அன்டோனியோ குட்ரேஸ் பதவியேற்றார். அவர் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர்.குட்ரேஸ் ஐ.நாவின் அகதிகள் அமைப்பின் தலைவராக பணியாற்றியவர். அவருக்கு பல மொழிகள் தெரியும். அவருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் பீட்டர் தாம்சன் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.அடுத்த 5 ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார்.
ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதை ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகள் ஒப்புதல் அளித்த பின்னர் குட்ரேஸ் பெயர் ஐ.நாவின் பொதுச்சபைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அன்டோனியோ குட்ரேஸ் ஏகமனதாக புதிய செயலாளராக தேர்வு ஆனார். பதவிக்காலம் முடிந்த பான் கி மூனின் ஒப்பற்ற சேவையையும் ஐ.நா சபையின் 193 உறுப்பினர் நாடுகள் பாராட்டின. ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் .பான் கி மூன் இரு முறை அந்த பதவியை வகித்து தற்போது பதவிக்காலம் முடிந்து விடைபெற்றுள்ளார்.கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். .
முன்னதாக போர்ச்சுகல் தொலைக்காட்சிக்கு அன்டோனியோ குட்ரேஸ் அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. இதேபோல அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்புடனும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன். அவரை விரைவில் சந்தித்துப் பேசுவேன். உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை தீர்க்க நான் பாலமாக விளங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிரியா, ஏமன், தெற்கு சூடான், லிபியா ஆகிய நாடுகளில் நடை பெறும் உள்நாட்டுப் போர் இன்னமும் ஓயவில்லை. இவை உட்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் புதிய பொதுச்செயலாளருக்கு பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த வாரம் , மக்கள் பேசுவதற்கும் ஒன்று கூடி மகிழ்வதற்குமான ஒரு கிளப்பாக ஐ.நா மாறிவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் கிண்டலை பொய்யாக்க வேண்டிய கடமையும் இவருக்கு இருக்கிறது.