அ.தி.மு.க.-வை வீழ்த்த நாம் தமிழர் நடத்திய மணி பிளான்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அ.தி.மு.க.-வை வீழ்த்த நாம் தமிழர் நடத்திய மணி பிளான்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

முதலில் இந்த நாம் தமிழர் எனும் கட்சிப் பெயர் திரு. சி.பா. ஆதித்தனார் கொந்தளிப்பான 1940-1950 களில் தமிழர் அடையாளம் குறித்து அச்சப்பட்டதின் விளைவாக அரசியல் கோட்பாட்டிற்கும், கட்சிக்கும் இட்டப் பெயராகும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு கடந்து இப்போதும் ஒரு நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மாநிலக் கட்சியாக பதிவு பெறும் தகுதியை நடந்து முடிந்த தேர்தலில் பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியப்பட்டது? கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈழப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் சீமான் தலைமையில் ஒரு அரசியல் கட்சியாகவோ, இயக்கமாகவோ துவங்கப்பட்டு அன்று அதிமுகவின் ஜெயலலிதாவை ஆதரித்து மக்களவைத் தேர்தலில் பரப்புரை ஆற்றியதன் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றனர். பின்னர் பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். இதுவரை எந்தவொரு வெற்றியும் இல்லை.

இத்தனைக்கும் சீமான் ஐம்பது வயதைக் கடந்தவர். முன்னாள் திரைத்துறைக் கலைஞர். தீவிரமாக திமுகவையும், அதிமுகவையும் எதிர்க்கிறவர். ஏன் எதிர்க்கிறார் என்றால் திராவிட அரசியல் தமிழர்க்கான உரிமைகளைப் பெற்றுத் தரவில்லை மாறாக இந்திய நடுவண் அரசிடம் மண்டியிட்டே ஆட்சி நடத்துகின்றனர். இதை மாற்ற வேண்டுமென்றால் தமிழ் நிலம் இணைப்பாட்சியாக மாற அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதாவது இறையாண்மையுள்ள குடியரசாக தமிழகம் மாற வேண்டும். மத்திய அரசிடம் ஒரு சில துறைகளே இருக்கும். மீதமிருப்பவை மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். அமெரிக்க அரசமைப்புச் சட்டம் மாகாணங்கள் பிரிந்து தனிநாடாகும் உரிமையைக் கொடுத்திருப்பதாக கூறுவர். அது கூட கடைசிக் கட்டமாக நடக்கும். முன்னாள் சோவியத் ஒன்றியமும் அப்படியொரு தன்னாட்சி உரிமையை வழங்கியிருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். ஆனால் நடைமுறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பல மாகாணங்களிடம் உள்ளது.

சமீபத்தில் கொரோனா பிரச்சினையில் சில மாகாணங்கள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்தன. இது போன்ற அதிகாரப் பரவல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாத்தியமே. ஆயினும் சில பத்தாண்டுகளில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் மோசமாகவுள்ளன. குறிப்பாக, ஊழல், சாதிய மேலாதிக்க அரசியல், குண்டர் ராஜ்ஜியம் என ஜனநாயக மரபுகளை புறந்தள்ளும் அரசியல் மாநில அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்கின்றன. இச்சூழலில் ஆட்சியதிகாரத்தை மொத்த்மாக அவற்றிடம் கொடுத்தால் மாநிலம் என்னாகும்?

நாம் தமிழர் கோரும் மற்றொன்று சமனியத் தமிழரசு. இது பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன் வைக்கப் படுகிறது. மேலும் சாதி அடிப்படையிலான சமூகத்தில் உழைப்புச் சுரண்டல் சாதி அடிப்படையில் நிகழ்வதாகவும் இதையும் அகற்ற வேண்டும் என்று கோருகிறது. இவற்றில் சிக்கல் என்னவென்றால் எந்தச் சாதியாக இருந்தாலும் தமிழர்தானே? ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் உழைப்பைச் சுரண்டலாமா? சாதி வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் சுரண்டலாமா? அப்படிச் சுரண்டக்கூடாது என்பதற்காக சமனியத் தமிழரசு என்கிறார்கள். அப்படியென்றால் பணக்காரன் – ஏழை வேறுபாடு இருக்காது. கூட்டுறவு முறையில் தொழில்கள் நடைபெறும். அனைவருக்கும் பொருளாதார சமத்துவம் கிட்டும். இப்படியொரு கருத்தாக்கத்தையே இக்கட்சி முன் வைக்கிறது.

இதிலுள்ள முரண் என்னவென்றால் யார் வேலை கொடுப்பது? அரசு கொடுக்கும். தனியுரிமைக் கிடையாது. ஆனால் மத விஷயத்தில் தனி நபர்களின் உரிமைக் காக்கப்படும் என்கிறது. மத விஷயத்தில் தனியுரிமை. ஆனால் பொருளாதாரத்தில் கிடையாது. சமூகம் பிரிந்திருப்பதே சாதி, மத ரீதியில்தானே? அதற்கு உரிமையுண்டு என்றால் ஏன் பொருளியல் தனியுரிமைக் கூடாது? சாதி, மத ரீதியில்தானே சுரண்டல் நடக்கிறது? அதை எப்படி அனுமதிப்பது? இக்கட்சியின் கொள்கைகளில் மேலும் தமிழர் அடையாள மீட்பு என்ற வகையில் வீர விளையாட்டுகளுக்கு முன்னுரிமை, பண்பாடு காப்பு எனப் பல அம்சங்கள் உள்ளன. இவற்றை எக்கட்சியும் நிராகரிக்கவில்லை. இதில் பாஜகவும் அடங்கும். ஆனால் இக்கட்சிக்கு இப்போது கிடைத்திருக்கும் செல்வாக்கு எப்படியானது? பரப்புரைகளால் வந்ததா இல்லை செயற்கையாக வரவழைக்கப்பட்டதா? இதற்கு பல நோக்கங்கள் இருக்கலாம்.

உடனடி நோக்கம் அதிமுக-பாஜக கூட்டணியை தமிழர் விரோத அணியாகச் சித்தரிப்பது. அதில் வெற்றி பெற்றிருந்தால் பாஜக நான்கு இடங்களைக்கூட வென்றிருக்காது. இரண்டாவது அதிமுகவை தமிழர் விரோதம் என்பது. கடந்த 2009 ஆம் ஆண்டின் நினைவிருந்தால் ஏன் அதிமுக தமிழர் விரோதமாகிறது? அதுவும் கிடையாது. வேறு? திமுகவை வெற்றிப் பெற வைப்பதா? இருக்கலாம். தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் கணக்கில் வராமல் கைப்பற்றப் பட்டது. இதில் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக மட்டும் ஈடுபட்டிருக்காது என இப்போது புரிகிறது. நாம் தமிழரை திமுக வெல்ல வேண்டும் என்பதற்காக பெரும் பணக்காரர்கள் ஆதரித்து இருக்கலாம். வாக்காளர்களுக்கும் பணம் விநியோகம் செய்திருக்கலாம். இரண்டு நீண்ட கால நோக்கில் உண்மையிலேயே நாம் தமிழர் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கம். சில முதலாளிகள் அகில இந்திய அளவில் வணிகத்தில் போட்டியிட தமிழகத்தில் தமிழர் மட்டுமே வணிகம் செய்ய வேண்டும் என்ற கோஷத்தை வைத்து வடக்கில் தங்களுக்கானப் பங்கைப் பெற நாம் தமிழரை பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்தலாம்.

எப்படியிருந்தாலும் ஏற்கனவே நூற்றாண்டு கோரிக்கைகளை புதிய மொந்தையில் பழைய கள் என்று கருதப்படுவதை ஏன் ஒரு அரசியல் கட்சியின் கோட்பாடாக வளர்த்து எடுக்க ஆசைப்பட வேண்டும்? காரணமின்றி மக்கள் வாக்களிக்கவில்லை உண்மையிலேயே விருப்பத்துடன் தான் நாம் தமிழருக்கு வாக்களித்தனர் என்று ஏற்கப்பட்டால் புதியதாக வலுப்பெறும் மாநிலக் கட்சி ஒன்று துவக்கத்தில் அப்படித்தான் இருக்கும் என்ரு கருதப்படும். முதன்முறையாக துவங்கப்பட்ட நாம் தமிழர் பின்னர் திமுகவிலும், அதன் பின்னர் அதிமுகவிலும் இணைந்தது. இது வரலாறு. இப்போதைய வரலாறு எப்படியாகும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

error: Content is protected !!