June 7, 2023

உலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்., இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்..ஆச்சர்யமும்., அமானுஷ்யமும் சூழ்ந்த அமேசான் காடுகளி கடந்த இரண்டு வாரங்களாக பெரும் தீப் பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த தீ விபத்து சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வரும் நிலையில், சர்வதேச பிரச்னையாக கருதி உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க பிரேசில் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன. கடந்த ஆண்டு 40,000 முறை வனத்தீ ஏற்பட்ட நிலையில், தற்போது 8 மாத காலத்தில் மட்டுமே 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங் களை விட கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 88 விழுக்காடு வரை அமேசான் காடுகள் அழிக்கப் பட்டதாக பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. உலகின் கார்பன் டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பிரேசிலின் சா பாலோ நகரில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் வனத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக, பிரேசிலின் சாவ் பாலோ நகரமே கரும் புகையால் சூழப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமேசான் காட்டுத் தீயால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காட்டுத் தீக்கு என்.ஜி.ஓ.க்கள்தான் காரணம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ குற்றம்சாட்டியுள்ளார்.

உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது என்றும் இது சர்வதேச பிரச்னையாக கருதி ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், அமேசான் அழிந்தால் அது உலக அழிவையே விரைவு படுத்திவிடும். ஏனென்றால், அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல; அதுதான் உலகின் நுரையீரல். அதிகபட்ச பிராண வாயுவை வாரிக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளல். இன்று பிரேசில், ஈக்வடார் போன்ற அரசுகள் செய்துள்ள செயல் நமக்குப் பாதுகாவலனாக இருந்த காட்டைச் சீரழிக்கிறது. அதிலிருந்தே நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.