மகாத்மாவின் கடைசி 14 மணிநேரம்: ஒரு வரலாற்றுத் துயரத்தின் காலவரிசை!
இந்தியாவின் ஆன்மா அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்த 1948, ஜனவரி 30-ம் தேதி. அன்று அதிகாலை 3:30 மணிக்கே காந்தியடிகள் எழுந்துவிட்டார். அது அவரது வாழ்வின் இறுதி நாள் என்று அந்த இயற்கைக்குக் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரார்த்தனை, எலுமிச்சை தேன் கலந்த வெந்நீர் என ஒரு சாதாரண நாளாகவே அவரது பொழுது விடிந்தது.
தமிழகத்தின் மீது மகாத்மா கொண்ட அக்கறை
அன்றைய தினம், காங்கிரஸ் விதிகளில் அவர் செய்ய நினைத்த மாற்றங்கள் குறித்து உதவியாளர் பியாரிலாலிடம் விவாதித்தார். அந்த இக்கட்டான சூழலிலும், பழைய சென்னை மாகாணத்தில் நிலவிய உணவுத் தட்டுப்பாடு குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டார். “தென்னை, பனை, கிழங்கு என இயற்கை வளம் செழித்த தமிழகத்தில் மக்கள் பட்டினி கிடப்பது வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்ட அவர், இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்த மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மதிய நேர சந்திப்புகள்
காலை உணவாக ஆட்டுப்பால், முள்ளங்கி, தக்காளிப் பச்சடி போன்ற எளிய உணவுகளை உட்கொண்டார். பின் வங்காளி மொழிப் பயிற்சி, கடிதங்களுக்குப் பதிலளித்தல் என அவரது கடமைகள் தொடர்ந்தன. பிற்பகல் 2:15 மணிக்கு இலங்கையிலிருந்து வந்திருந்த டாக்டர் டி.சில்வாவின் மகளுக்குத் தனது கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார். மகாத்மா இவ்வுலகில் இட்ட கடைசி கையெழுத்து அதுதான்.
பட்டேலுடனான இறுதி உரையாடல்
மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் அவரைச் சந்தித்தார். நேருவுக்கும் பட்டேலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் காந்திஜி உறுதியாக இருந்தார். “தேசத்திற்காக நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும்” என பட்டேலைச் சமாதானப்படுத்தியதில் 10 நிமிடங்கள் தாமதமானது.
அந்த 5:17 மணி… நிலைகுலைந்த பாரதம்!
மாலை 5:10 மணிக்கு ஆபா மற்றும் மனு ஆகிய பேத்திகளின் தோள்களில் சாய்ந்தபடி பிரார்த்தனை மேடையை நோக்கி நடந்தார். 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அந்த இடத்தில், திடீரெனக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்தான் நாதுராம் விநாயக் கோட்சே.
மனு காந்தி அவனைத் தடுக்க முயன்றபோது, அவர் கையில் இருந்த ஜபமாலையும் நோட்டுப் புத்தகமும் சிதறி விழுந்தன. அடுத்த சில நொடிகளில், கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மூன்று முறை சுட்டான்.
-
முதல் குண்டு: காந்தியின் கால்கள் தடுமாறின.
-
இரண்டாவது குண்டு: வெள்ளை உடையில் ரத்தம் கசியத் தொடங்கியது.
-
மூன்றாவது குண்டு: மார்பைத் துளைக்க, “ஹே ராம்… ஹே ராம்…” என்ற முனகலுடன் அந்த மகான் மண்ணில் சாய்ந்தார்.
மாலை 5:17 மணிக்கு அந்த அகிம்சைச் சுடர் அணைந்தது. டாக்டர் பார்கவா பரிசோதித்து விட்டு, “மகாத்மா நம்மை விட்டுப் பிரிந்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டது” என்று அறிவித்தபோது ஒட்டுமொத்த தேசமும் கண்ணீரில் மூழ்கியது.
முக்கியத் தகவல்கள் – ஒரு பார்வையில்:
| நிகழ்வு | விவரம் |
| மறைந்த நாள் | 1948 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை |
| கடைசிச் சொல் | ஹே ராம் |
| கடைசிச் சந்திப்பு | சர்தார் வல்லபாய் பட்டேல் |
| இறுதி நேரம் | மாலை 5:17 மணி |
டாக்டர். ரமா பிரபா


