32°C
விளம்பரம்
Advertisement

அறிவின் திறவுகோல்: உலகப் புத்தக தினம் 2026!

admin Published: April 23, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


புத்தகங்கள் வெறும் காகித அடுக்குகள் அல்ல; அவை காலத்தைக் கடந்து பயணிக்கும் அறிவின் கருவூலங்கள். அறியாமை எனும் இருளை நீக்கி, மனித குலத்தைப் பண்படுத்தும் இந்த உன்னதக் கலைவடிவத்தைக் கொண்டாடும் விதமாகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி ‘உலகப் புத்தக தினம்’ உலகெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நேரடியாகச் சந்திக்க முடியாத பல ஆளுமைகளையும், சென்றடைய முடியாத நிலப்பரப்புகளையும் ஒரு சில பக்கங்களுக்குள் கடத்தித் தரும் மந்திரக் கோலாக இத்தினம் புத்தகங்களை முன்னிறுத்துகிறது.

2026-ஆம் ஆண்டின் உலகப் புத்தக தினமானது, வாசிப்பவரின் கற்பனைத் திறனை விரிவுபடுத்தி, புதிய தேடல்களுக்கான விதையைத் தூவும் உன்னத நோக்கத்துடன் அரங்கேறுகிறது. தனிமையில் இருக்கும்போது ஒரு சிறந்த நண்பனாகவும், தடுமாறும் போது ஒரு வழிகாட்டியாகவும் புத்தகங்கள் துணை நிற்கின்றன என்பதை நினைவுகூரும் இத்தினம், நாகரிகத்தின் சுவடுகளையும் வரலாற்றின் பாடங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு பாலமாகத் திகழ்கிறது.

2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme)

இந்த ஆண்டுக்கான உலகப் புத்தக தினக் கருப்பொருள்: “கதைகளின் வழி உலகினை இணைப்போம்” (Connecting the World through Stories) என்பதாகும். எல்லைகளையும் மொழிகளையும் கடந்து, கதைகளின் வாயிலாக மனித நேயத்தை வளர்ப்பதே இந்த ஆண்டின் முக்கிய இலக்காகும்.

உருவான வரலாறு

“வீட்டை அலங்கரிக்க புத்தகங்களைவிட, அழகான பொருள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்பார், ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர். புத்தகங்கள் வீட்டை மட்டும் அலங்கரிப்பதில்லை; மனிதனின் அறிவு வளர்ச்சியையும் அலங்கரிப்பவை. இந்தப் புத்தக தினத்திற்கான அடித்தளத்தை சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாள் ‘உலகப் புத்தக தினம்’ என்று மட்டுமல்லாது, ‘புத்தக உரிமை தினமாகவும்’ கொண்டாடப்படுகிறது.

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலகச் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இத்தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் அனைவரும் இந்தப் புத்தக தினத்தன்று நிறைய புத்தகங்களை விரும்பி வாங்குவதோடு, இந்த நாளில் பிறந்த மற்றும் இறந்த மாமனிதர்களுக்கு மரியாதையும் செய்கின்றனர்.

வாசிப்பால் உயர்ந்த ஆளுமைகள்

குறிப்பாக, ஆங்கிலேய நாவலாசிரியர் ஷேக்ஸ்பியர் இந்த நாளில்தான் இறந்துபோனார். வாசிப்பின்மீது அவர் கொண்டிருந்த தீராக்காதல், அவரை உலகமறியும் அளவுக்கு உயர்த்தியது. அதேபோல், பார்வை திறனற்ற நிலையிலும் ஜான் மில்டன் காலத்தால் அழியாத நூல்களைப் படைத்தார்.

புரட்சியாளர் பகத்சிங்கோ, தான் சாகும்வரை படித்துக்கொண்டிருந்தார். “சாகப்போகிறோம் என்றாகிவிட்டது… இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று அவரிடம் கேட்டதற்கு, “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார்.

தான் தேடிய புத்தகம் பல மைல் தொலைவில் இருப்பதை அறிந்து, அங்குசென்று அதை வாங்கிப் படித்தவர் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதேபோல கார்ல் மார்க்ஸ், புத்தக அறைகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால்தான், அவரால் உலகுக்கு ‘மூலதன’த்தைக் கொடுக்க முடிந்தது. நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் மிகப்பெரும் புத்தக வாசிப்பாளராகவே மறையும்வரை இருந்தார்.

கால மாற்றமும் புத்தகமும்

சுவர்களிலும், எலும்புகளிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த எழுத்துகள் இன்று, அறிவியல் முன்னேற்றத்தால் அச்சுப் புத்தகங்கள் மூலமாகவும், மின்-நூல்கள் (E-books) வாயிலாகவும் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என்பதை உணர்ந்து, இந்த உலகப் புத்தகத் திருநாளில் வாசிப்பை நேசிப்போம்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

உடனடி செய்திகள்