அறுவைச் சிகிச்சை தோன்றிய வரலாறு…!
அறுவை சிகிச்சையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியது. சுமார் 9,000–12,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தலையில் துளையிட்டு ஒரு மருத்துவம் நிகழ்ந்துள்ளது எனத் தொல்லியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டைய எகிப்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை சிகிச்சை நடந்ததை அங்குக் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகிறன.இந்தியாவில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்ருதா என்ற மருத்துவர் வாழ்ந்தார். இவர் அந்தக் காலத்திலேயே அவர் 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகளையும் 120 அறுவை சிகிச்சை கருவிகளையும் விளக்கிடப் பதிவு செய்திருக்கிறார். இதனால் மருத்துவர் சுஷ்ருதாவை இவ்வுலகம் “அறுவை சிகிச்சையின் தந்தை” என்று பெருமையுடன் அழைக்கிறது.இவரின் சாதனையில் கண்புரை அறுவை சிகிச்சை, மூக்கின் மறுசீரமைப்பு, எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுக்கான சிகிச்சைகளும் அடங்கும். சுஷ்ருதாவின் காலத்திற்கு சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரோமன் நாட்டில் கண்புரை அகற்றுதல், காயத்திற்கான சிகிச்சை மற்றும் நரம்புச் சிகிச்சை நடந்தன.
இதற்குப் பின் சுமார் 200 ஆண்டுகள் பின்னர் இன்றைய ஸ்பெயின் நாட்டுப் பகுதியில் ஒரு இஸ்லாமிய மருத்துவர் தோன்றினார். இவரின் பெயர் அபு அல்-காசிம் அல்-சஹ்ராவி ஆகும். இவர் “அல்-தஸ்ரிஃப்” என்ற விரிவான அறுவை சிகிச்சை கலைக்களஞ்சியத்தை இயற்றியுள்ளார்.அடுத்த 600 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு மருத்துவர் அம்ப்ரோஸ் பாரே பிறந்தார். இவர் இரத்த போக்கைக் கட்டுப்படுத்தி அறுவைச் சிகிச்சையும் முறையைக் கண்டறிந்தார். இதன் மூலம் அறுவை சிகிச்சைத் தொழில்நுட்பம் அடுத்த நிலைக்குச் சென்றது. இந்த முறை நவீன சிகிச்சை முறைகளுக்கு அடியெடுத்துவைக்க உதவியது.இன்றிலிருந்து 178 ஆண்டுகளுக்கு முன்புதான் மயக்க மருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யம் முறை தோன்றியது. முதல் மயக்க மருந்தாக ஈத்தர் பயன்படுத்தப் பட்டது. அக்டோபர் 16, 1846 ஆண்டுதான் இந்தச் சிகிச்சை நடந்தது. இதன் மூலம் வில்லியம் டி.ஜி. என்பவரின் கழுத்திலிருந்த கட்டி அகற்றப்பட்டது. இந்தச் சாதனையைச் செய்தது ஜான் காலின்ஸ் வாரன் (John Collins Warren) என்ற மருத்துவர். இவர் ஒரு அமெரிக்கர். இதன் மூலம் வலியில்லா அறுவைச் சிகிச்சை உதயமானது. இதற்குப் பின்னர் சிக்கலான அறுவைச் சிகிச்சை முறைகள் வகை வகையாக உதயமாகத் தொடங்கியது.வெற்றிகரமான உள்ளுறுப்பு அறுவை சிகிச்சைக்கு அவற்றின் நிலையைக் கண்டறிவது அவசியமானது.
நம் உடல் 70 விழுக்காடு தண்ணீரால் ஆனது. இருந்தாலும் நம் உள் உறுப்புக்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. காரணம் தண்ணீர் மற்றும் கொழுப்பின் ஒளி பிரதிபலிக்கும் பண்புகளில் உள்ள வேற்றுமையே முக்கியக் காரணங்களாகக் கருதப் படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 8, 1895ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென், ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஒரு கதிர் வீச்சைத் தற்செயலாகக் கண்டறிந்தார். அது என்னவென்று புரியாத கதிர் வீச்சாக இருந்தது. எனவே இதற்கு எக்ஸ் கதிர் (X ray) எப்பெயரிட்டனர். இது உடலின் உள்ளுறுப்புக்களின் நிலையை எளிதாகக் கண்டறிய உதவியது. இந்தச் சாதனைக்காக 1901 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ரோன்ட்ஜெனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மேரிக் குயூரி இந்தக் கதிர் வீச்சை எளிதில் மருத்துவ மனையில் உருவாக்க மருத்துவ எக்ஸ்ரே கருவியை வடிவமைத்தார்.
1970களில் எக்ஸ்ரே கதிர் வீச்சைப் பயன்படுத்தி CT (கம்ப்யூட்டர் டோமோகிராஃபி) ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளுறுப்புக்களில் உள்ள சேதம் மற்றும் நோய்ப் பாதிப்பின் முப்பரிமாண வடிவைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதனை உருவாக்கிய காட்ஃப்ரே ஹவுன்ஸ்ஃபீல்ட் (Godfrey Hounsfield) மற்றும் ஆலன் கார்மாக் (Allan Cormack) என்ற இரு ஆராய்ச்சியாளர்களுக்கும், 1979ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்னதான் இருந்தாலும் எக்ஸ்ரே கதிர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உள்ளுறுப்புகளில் உள்ள அனைத்துப் பாதிப்புக்களை எளிதில் கண்டறிய முடியாது. உதாரணமாக மென்மையான திசுக்களில் உள்ள சேதங்கள், மூளை மற்றும் தண்டுவடப் பாதிப்புக்களை எக்ஸ்ரே உதவியுடன் முழுமையாகக் கண்டறிய முடியாது.இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் விதமாக, சக்திவாய்ந்த காந்தப் புலத்தையும் ரேடியோ கதிர்வீச்சையும் பயன்படுத்தி MRI (Magnetic Resonance Imaging) ஸ்கேன் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உடல் உள்ளுறுப்புக்களில் உள்ள எல்லாவிதமான பாதிப்புக்களை எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது.
அடுத்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்து வந்த நரேன்தர் சிங் காபானி (Narinder Singh Kapany) என்ற பஞ்சாபியர் பைபர் ஆப்டிக்ஸ்சைக் கண்டறிந்தார். இதன்மூலம் சிறிய புகைப் படக் கருவியை உடலுக்குள் செலுத்தி வயிறு போன்ற உறுப்புக்களில் உள்ள பாதிப்புக்களைக் கண்டறிய முடிந்தது. மேலும் இதனைக் கொண்டு அறுவைசிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளிக்கவும் முடிந்தது. இந்த முறையை எண்டோஸ்கோப்பியென அழைக்கப்படுகிறது.வாய் வழியாக ஒரு புகைப்படக் கருவியைத் திணித்துப் பாதிப்புக்களைக் கண்டறியும் முறை மேலும் முன்னேறியது. சிறு சிறு புகைப்படக் கருவிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இவை ஒரு மாத்திரை அளவிலேயே இருக்கும். இவற்றில் சிலவற்றை விழுங்கினால் போதும். இவை பயணிக்கும் இடங்கள் எல்லாம் கணினியில் திரைப்படமாக ஓட ஆரம்பிக்கும். இப்படி தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அடுத்ததாக இரத்தக் குழாய் வழியாகவும் புகைப்படக் கருவிகளையும் சிறு கத்தரிக்கோலையும் திணித்து இதயத்தில் கூட அறுவை சிகிச்சைச் செய்ய வழிமுறை வந்துவிட்டது. இதனைப் பைபாஸ் அறுவை சிகிச்சையென அழைக்கப்படுகிறது.“உள்ளுறுப்புகளைக் காணக் கருவிகள் எதுவும் தேவை இல்லை என்ற நிலையை நோக்கிப் பயணிக்கிறோமோ?” என்று சிந்திக்கத் தோன்றுகிறது. காரணம் மஞ்சள் 5 என்ற பொடி சந்தைக்கு வருகிறது. “இதனை உடலில் தடவினால் போதும் தோல் கண்ணாடியாக மாறிவிடும்” எனக் கண்டறியப்பட்டுள்ளது. காரணம் நம் உடலில் உள்ள தண்ணீரும் கொழுப்பும் ஒளியைச் சிதறடிக்கும் பண்பை ஒரே நிலைக்கு இந்தப் பொடி கொண்டு வருகிறது. அதனால் உள்ளுறுப்புகள் நம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்து உள்ளுறுப்புகளின் சிக்கலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பொடி நமக்கெல்லாம் தெரிந்ததுதான். வண்ண வண்ணமாகக் கேக் செய்யப் பயன்படுத்தப்பட்ட பல நிற பொடிகளில் இதுவும் ஒன்று.அடுத்து என்னென்ன வளர்ச்சிகள் மற்றும் வசதிகள் வரும் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.