செய்தியைக் கேட்க / Listen to News
வெளிநாடுகளுக்குக் குடியேற விரும்புவோரின் பட்டியலில், வெயில் பிரகாசிக்கும் எழில் கொஞ்சும் தீவுகளையும், பூஜ்ஜிய வரி விதிக்கும் (Zero-tax) நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி, ஐரோப்பியச் சிறிய நாடான எஸ்டோனியா முதலிடம் பிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசக் குடியேற்ற ஆலோசனை அமைப்பான ‘ருமாவி’ (RUMAVI) வெளியிட்டுள்ள ‘2026 உலகளாவிய குடியேற்றக் குறியீட்டு’ (Global Relocation Index) அறிக்கையில், உலகின் 192 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி எஸ்டோனியா உலகின் ‘சிறந்த குடியேற்ற நாடு’ என்ற முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெயிலை விட ஆட்சி நிர்வாகமே முக்கியம்
பொதுவாக வெளிநாடுகளுக்குக் குடிபெயர்பவர்கள் மிதமான காலநிலை கொண்ட அல்லது சொகுசான கடற்கரை நாடுகளையே தேர்வு செய்வார்கள் என்ற நிலையை இந்த ஆய்வு முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. குளிரும் இருளும் நிறைந்த நீண்ட குளிர் காலத்தைக் கொண்ட எஸ்டோனியா, காலநிலை வசதியில் 100-க்கு 20 புள்ளிகளை மட்டுமே பெற்றபோதிலும், வங்கித் துறையின் வலுவான கட்டமைப்பு (99 புள்ளிகள்), வியாபார வாய்ப்புகள் (96 புள்ளிகள்) மற்றும் வலுவான சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, போர்த்துகல் போன்ற நாடுகளை முந்தி சாதனையைப் படைத்துள்ளது.
டிஜிட்டல் புரட்சியும் தொழில்முனைவோர் வாய்ப்புகளும்
எஸ்டோனியாவின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் அந்நாட்டின் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பே முதன்மைச் சக்தியாக விளங்குகிறது. உலகின் முதல் ‘டிஜிட்டல் நோமட் விசா’ (Digital Nomad Visa) மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்கள் எஸ்டோனியாவில் ஆன்லைன் மூலமாகவே தொழில் தொடங்க வழிவகுக்கும் ‘ஈ-ரெசிடென்சி’ (e-Residency) திட்டம் போன்றவை உலகளாவிய தொழில்முனைவோரைக் கவர்ந்துள்ளன. வர்த்தகத்தைச் சுதந்திரமாக நடத்துவதற்கும், சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும் உகந்த வெளிப்படையான சட்ட அமைப்புகள் உள்ளதால், தொழில்முனைவோருக்கான தரவரிசையிலும் எஸ்டோனியா உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

குடும்பங்களுக்கான பாதுகாப்பு மற்றும் தரமான வாழ்வியல்
வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், ஒரு குடும்பம் பாதுகாப்பாக வாழ்வதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஏற்ற உலகளாவிய தரவரிசையில் எஸ்டோனியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. குற்றங்கள் மிகக் குறைந்த பாதுகாப்பான வீதிகள் (77 புள்ளிகள்), சிறந்த சுகாதார அமைப்பு, தரமான கல்வி மற்றும் பசுமையான இயற்கைச் சூழல் (86 புள்ளிகள்) ஆகியவை அந்நாட்டை ஒரு தலைசிறந்த வாழ்விடமாக மாற்றியுள்ளன. வரி விகிதம் குறைவாக இருந்தால் மட்டும் போதாது; நாட்டின் நிதி அமைப்பும், நீதித்துறையின் நேர்மையும், மக்களின் பாதுகாப்பும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு எஸ்டோனியாவின் வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகும்.
மாறிவரும் சர்வதேசக் குடியேற்றப் போக்குகள்
ருமாவி குறியீட்டின் படி, அதிக வரி விலக்கு அளிக்கும் நாடுகளை விட, நிலையான அரசியல் சூழலையும் வலுவான சட்டப் பாதுகாப்பையும் வழங்கும் நாடுகளுக்கே உலகளவில் குடியேறுபவர்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். இப்பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள நிலையில், உலகின் முன்னணி வல்லரசு நாடுகள் பலவும் சட்ட சிக்கல்கள் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் பின் தங்கியுள்ளன. குடியேற்ற விரும்புவோருக்குச் வெறும் காலநிலை அல்லது இயற்கை அழகு மட்டும் முக்கியமல்ல; மாறாக, சீரான அரசும், வெளிப்படையான டிஜிட்டல் கட்டமைப்புமே ஒரு நாட்டின் உண்மையான வலிமை என்பதை எஸ்டோனியாவின் இந்த வரலாற்றுச் சாதனை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
ரமாபிரபா

