பிரதமராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். பற்றிப் புகழ்ந்து பேசியதன் பின்னணி!

பிரதமராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். பற்றிப் புகழ்ந்து பேசியதன் பின்னணி!
ந்த சுதந்திரதினத்தில் தேசியக் கொடியேற்றிய பிரதமர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் புகழ்ந்து பேசியதுதான் சர்ச்சையாகிவிட்டது. நமது சுதந்திரத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி. இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும்.
‘நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1925-ல்) நிறுவப்பட்டது ஆர்.எஸ்.எஸ். அதன் தொண்டர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகத் தங்கள் வாழ்க்கையைத் தாய்நாட்டின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவையே ஆர்.எஸ்.எஸ்ஸின் அடையாளங்கள். உலகின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு அமைப்பு அது. அதன் சேவைக்குப் பங்களிக்கும் தொண்டர்களை வணங்குகிறேன். அதன் அர்ப்பணிப்பிலும் நூற்றாண்டு காலச் சேவையிலும் தேசம் பெருமை கொள்கிறது’ என்று சுதந்திரத் திருநாளில் பிரதமர் ஆர்.எஸ்.எஸ். புகழ் பாடியது எதற்காக? அதுவும் காவி முண்டாசு கட்டிக் கொண்டு செங்கோட்டையில் நின்றபடி இப்படிப் பேசியது சரிதானா என்பதுதான் கேள்வி.இந்திய நாடு மதச்சார்பில்லாதது. மக்களுக்குத்தான் மதம் உண்டே தவிர, அரசுக்குக் கிடையாது. அரசுக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். அப்படிப்பட்ட நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு, இந்துத்துவாவைத் தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பற்றிப் புகழ்ந்து பேசியதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுவிட்டது.
காரணம், ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா கொள்கை. அதன் முக்கிய நோக்கமே இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என அது அறைகூவல் விடுத்தாலும் ‘நாமனைவரும் இந்துக்களே; நாமெல்லாம் ‘இந்துக்கள்’ என்னும் ஒரே ஜாதிதான்’ என்று அது ஒருபோதும் சொன்னதாகத் தெரியவில்லை. சாட்சாத் அந்த கிருஷ்ண பகவானே, வருணக் கலப்பு ஏற்படுவது சமுதாயத்தில் பெருங்குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்று கீதையில் சொன்ன பிறகு, ஆர்.எஸ்.எஸ்ஸால் எப்படி அந்த பகவானுக்கு எதிராகச் செயல்பட முடியும்? அதனால், நான்கு வருணங்களும் பிரகாசமாக ஒளிர வேண்டுமென்பதே அவர்கள் அவா. இந்தக் காரணத்தால்தான், ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கி, இன்றைய தலைவரான மோகன் பகவத்வரையிலான ஏழு தலைவர்களில், ஒரேயொரு தலைவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆக, அவர்களைப் பொருத்தவரை சேவை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு என்பதெல்லாம் வருணங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு?
இந்த விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்திற்காகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட ஒரு போஸ்டர், சர்ச்சையை மேலும் தூண்டிவிட்டுவிட்டது. இதை ஓர் அமைப்பு வெளியிடலாம்; அமைச்சகம் வெளியிடலாமா என்பதுதான் கேள்வி. அதில், சிறைவாழ்க்கையின் கொடுமை தாளாமல், வெள்ளையனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையானவர் என்ற விமர்சனத்திற்காளான சாவர்க்கர் படம் போஸ்டரின் உச்சியில். அதற்குக் கீழே மகாத்மா காந்தி. அதற்கும் கீழே சுபாஷ் சந்திரபோஸும் பகத் சிங்கும். காந்திஜி படத்திற்கும் மேலே சாவர்க்கர் படமா? இந்துத்வாவின் மொத்த உருவமான சாவர்க்கர் எப்படிப் பட்டவர் தெரியுமா? 1939-ம் ஆண்டில், சாவித்திரி தேவி என்பவர் எழுதிய ‘இந்துக்களுக்கு எச்சரிக்கை’ என்னும் புத்தகம் வெளிவந்தது. அதற்கு முன்னுரை எழுதிய சாவர்க்கர், ‘கலியுகத்தில் மனிதகுலத் துன்பங்களுக்கு முடிவு கட்டடுவதற்காகவே, கடவுளின் விருப்பத்தின்பேரில் அடால்ஃப் ஹிட்லர் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் விஷ்ணுவின் அவதாரம்’ என்று எழுதியவர். அவருக்கா முதல்மரியாதை என்று கேட்கிறார்கள்.
ஒருபுறம் இப்படியிருக்க, இன்னொருபுறம் எப்படி? 1940- 1973 வரை ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அயோக்கிய யூதர்களை வேரோடு அழித்து, ஜெர்மனியின் இனம் மற்றும் கலாசாரத் தூய்மையை காப்பாற்றியவர் ஹிட்லர்’ என்று ஹிட்லரைக் கொண்டாடியவர் கோல்வால்கர். ஒரு நாட்டில் ஓர் இனம்தான் இருக்க வேண்டும். மற்ற இனங்களை வெளியே துரத்து அல்லது கொல். இதுதான் ஹிட்லர் பாணி. இந்தியாவில் எத்தனை இனங்கள் இருக்கின்றன? பற்பல. பல்வேறு மதத்தினரும் வசிக்கிறார்கள். இங்கே எப்படி ஹிட்லரைக் கொண்டாட முடியும்?
இந்நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பிரதமர். அதைப் புகழ்வதற்கு வேறு எத்தனையோ மேடைகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் பெற்ற சுதந்திரத்தை எப்படி பேணிக் காப்பது என்று இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பிரதமர், செங்கோட்டையில் நின்றுகொண்டு, மதச்சார்பானதோர் அமைப்பைப் புகழ்ந்து பேசலாமா என்ற எதிர்க்கட்சியினரின் கேள்வியை எப்படிப் புறந்தள்ள முடியும்? நரேந்திர மோடி என்னும் தனிமனிதருக்கு ஒரு மதம் இருப்பதிலும் அதை அவர் பின்பற்றுவதிலும் எந்தக் கொம்பனாலும் தவறு கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நமது பிரதமர் என்பவருக்கு எந்த மதமும் கிடையாது அல்லது அனைத்து மதங்களும் சமம் என்பதுதான் நமது இந்திய ஜனநாயகத்திலுள்ள மதச்சார்பின்மையின் அழகு. இதைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது.
நம் போன்ற சாதாரணர்களுக்கே தெரிந்த இது, பிரதமருக்குத் தெரியாதா? நன்றாகவே தெரியும். ஆனாலும் இப்போது அவருக்குத் தேவை பதவி நீட்டிப்பு. அதை ஆர்.எஸ்.எஸ்ஸால் மட்டுமே செய்ய முடியும். அதற்காகத்தான் அதைப் புகழ்ந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். உண்மையா என்பதைப் பிரதமர்தான் சொல்ல வேண்டும்.
செ.இளங்கோவன்

 

Related Posts

error: Content is protected !!