’தண்டட்டி’ – விமர்சனம்

’தண்டட்டி’ – விமர்சனம்

பாம்படங்கள் அல்லது தண்டட்டி என்பது தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். இருபதைந்து ஆண்டுகளுக்கு முன் னால் பல்வேறு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள் காது தொங்கும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள். அதனை தண்டட்டி ,பாம்படம் என்று அழைக்கிறார்கள். சிறுவயதிலேயே காதுகுத்தி மரத்துண்டு பயன்படுத்தி அல்லது குச்சம் காளி தொங்க விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காதை நீளமாக வடித்து. தண்டட்டி, பாம்படம் அணிந்து கொண்டனர். இதை அணிந்த பாட்டிமார்களை பார்க்கும்போது காது விழுந்து விடுமோ என்ற பயம் ஏற்படும்.

பாம்படம் என்பது பந்து, கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும். அரிதுளுவன், பன்னீர், செம்பு, தாமரை கால், சுண்ணா கலயம் என்ற பல வகைகள் உண்டு..

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்த பாம்படங்களும் ஒரு அறிவியல் படைப்பே ஆகும்.

இந்த நகைகள் உள்ளீடற்ற இலகுவான அமைப்பில் செய்யப்படும், மெழுகு வார்த்து உட்பொருளாக சேர்கப்படும்.

அட்டியல், காசு மாலை போன்ற ஆபரணங்களையும் இப்போது காண முடியவில்லை .

இன்று வெகு சில பாட்டிமார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருக்கிறார்கள்..இப்படியான சூழலில் தண்டட்டி அணிந்திருக்கும் ஒரு பாட்டியின் கதை சுவைபட சொல்ல வந்திருப்பதே `தண்டட்டி’ படம்.

அதாவது தேனி டிஸ்ட்ரிக்கில் இருக்கும் ஒரு வில்லேஜ்.. சகல பஞ்சாயத்துகளையும் தங்களுக்குக்குளேயே முடித்து கொள்ளும் அந்த கிராமத்தில் 57 வயது பாட்டி ரோகினி காணாமல் போகிறார். இதை அடுத்து தனது அப்பத்தாவை கண்டுபிடித்து தருமாறு கிஷோர் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் அளிக்கிறார், ஸ்டேஷனில் ரிட்டயர் ஆகப் போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஏட்டு பசுபதி ஒருவழியாக ரோகிணியை கண்டு பிடித்து விடுகிறார். ஆனால் அந்த ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, சக போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அவரது உடலுடன் கிராமான கிடாரிப்பட்டிக்கு பசுபதி எடுத்துச் செல்கிறார்.

இச்சூழலில்இறந்து போன தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போட, அந்த தண்டட்டி திடீரென்று காணாமல் போய்விடுகிறது. அப்படி காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலர் பசுபதி இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து, தண்டட்டியை கண்டுபிடிப்பதெப்படி? ரோகிணி காணாமல் போனது ஏன், என்பதை எல்லாம் நகைச்சுவை கலந்து, சொல்லி இருப்பதுதான் ‘தண்டட்டி’ படத்தின் கதை.

மெயின் கேரக்டரான காணாமல் போகும் தங்கப்பொண்ணு என்ற ரோலில் பாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி பங்களிப்பு அபாரம்.. உயிரற்ற பிணமாக இருந்த படிக் கூட நடிப்பை வெளிப்படுத்துவதுதான் ஆச்சரியம்.. ஏட்டு சுப்பிரமணியாக வரும் பசுபதியால்தான் படமே கலகலவென்று ஓடுகிறது. இவர்கள் தவிர ரோகிணியின் பிள்ளைகளாக வரும் நடிகர் விவேக் பிரசன்னா, நடிகைகள் தீபா, பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் படத்தின் கதையோட்டத்துக்கும் காமெடி போர்ஷனுக்கும் உதவி, தங்கள் கேரக்டர்களை பக்காவாக செய்திருக்கிறார்கள். இள வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, போர்ஷன் கம்மிதான் என்றாலும், அவரது கதை எடுபடுகிறது.

மகேஷ் முத்து சாமியின் கேமரா தேனி கிராமத்தை அம்புட்டு அழகாகக் காட்டுகிறது. கிராமத்தில் ஒரு சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களை இயல்பாய் , யதார்த்தமாய் உணர வைக்கிறது .

தென்ன்னகத்தின் துக்க வீடு, அங்கு நடக்கும் சடங்குகள், அங்கிருக்கும் மக்களின் மனநிலை மற்றும் உறவினர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் ஆகியவற்றை எதார்த்தமாக காட்சிப்படுத்த உதவிய அத்தனை நபர்களும் அபாரம்.. ஆனால் இடைவேளைக்கு பின்னர் வரும் காமெடி காட்சிகள் எதார்த்த தன்மையை இழந்து, ஓவர் டோஸ் ஆகிவிடுகின்றன. முக்கியமாக, முதற்பாதிக்கு சுவைகூட்டிய மகள்களின் சண்டைக் காட்சியும், ஒப்பாரி வைக்கும் மூதாட்டிகளின் அட்டூழியங்களும், இரண்டாம் பாதியிலும் எவ்வித புதுமையுமின்றி அப்படியே நீள்வது, திரைக்கதைக்குத் தொய்வைத் தருகிறது. குறிப்பாக படத்தின் பக்கபலமாக அமையும் காமெடி, அவ்வப்போது ஓவர்டோஸாகி நம்மை கதை ஓட்டத்தில் இருந்து விலக்கி விடுகிறது. காமெடி, எமோஷன், காதல் என அனைத்தும் தனித்தனி ட்ராக்கில் பயணிப்பது படத்தின் பெரும் பின்னடைவு!

படத்தின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பொறுமையாகவும் அதே சமயம் தேவையான வேகத்திலும் முதல் பாதியில் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழம்பித் தவிக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் – சொதப்பி விட்டது..

ஆனாலும் – ஒரு பக்கா எண்டர்டெயினர் மூவியே!

மார்க் 3.25/5

error: Content is protected !!