❤️’தேரே இஷ்க் மே’ விமர்சனம்: – தனுஷின் மனதை உருக்கும் காதல் பயணம்!

❤️’தேரே இஷ்க் மே’ விமர்சனம்: – தனுஷின் மனதை உருக்கும் காதல் பயணம்!

மீபகாலமாக,  கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் திரையுலகங்கள் வரை இரத்தக்களரியும் ஆக்‌ஷன் கதைகளுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், உணர்வுப்பூர்வமான, ஆழமான காதல் கதைக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகர் தனுஷ். இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தேரே இஷ்க் மே’ (Tere Ishk Mein) திரைப்படம், இதயத்தை உருக்கும் காதல் காவியமாகப் பேசப்படுகிறது.

🎭 தனுஷின் நடிப்பு: தேசிய விருதை உறுதி செய்யும் ‘ஷங்கர்’

இந்திய விமானப்படையின் வீரன் ஷங்கர் (தனுஷ்) என்ற பாத்திரத்தில், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத இளைஞனாகத் தனுஷ் வாழ்ந்திருக்கிறார். கோபமும் வன்முறையும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த வேதனைகள், பல இடங்களில் நம்மை கலங்க வைக்கின்றன.

ஷங்கரின் பாத்திர வார்ப்பு, கோபம், காதல், ஏமாற்றம் எனப் பல உணர்வுகளைக் கடந்து செல்வதால், அதில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். அவர் ஏன் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கிறது. தனுஷும், கிருத்தி சனுனும் தங்கள் பாத்திரங்களை நிஜமாக்க எவ்வளவு பிடிவாதமாகவும் போட்டியுடனும் நடித்திருக்கிறார்கள் என்பதற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

📜 கதைச்சுருக்கம்: நிபந்தனைக்குட்பட்ட காதல்

இந்திய விமானப்படை வீரராக இருக்கும் ஷங்கர், தன் கோபக் குணத்தால் மனநல ஆலோசனை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். மனநல ஆலோசகராக நியமிக்கப்படுபவர் முக்தி (கிருத்தி சனுன்). தனது ஆய்வறிக்கைக்காக (Thesis) ஷங்கரை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் முக்தி, “உன்னை நல்லவனாக மாற்றுகிறேன், அதற்கு உதவ வேண்டும்” என்று கேட்கிறாள்.

அதற்கு ஷங்கர், “நீ எனக்கு கேர்ள் ஃபிரண்டாக இருந்தால் சம்மதிக்கிறேன்; ஆனால் எந்த நேரத்திலும் உன்னை காதலிக்க மாட்டேன்” என்ற நிபந்தனையுடன் முக்தியைச் சம்மதிக்க வைக்கிறான். வருடக் கணக்கில் நடக்கும் இந்தச் சந்திப்பில், முக்தி மீது ஷங்கருக்குத் தீராத காதல் ஏற்படுகிறது. ஆனால், முக்திக்கு அவன் மீது காதல் இல்லை.

ஒரு கட்டத்தில் ஷங்கர் தன் காதலைச் சொல்ல, முக்தி நிபந்தனை விதிக்கிறாள்: UPSC தேர்வெழுதி அதிகாரி ஆகித் திரும்ப வேண்டும். மூன்று வருடங்கள் கழித்து, அதிகாரி ஆகித் திரும்பும் தனுஷுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது – தான் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடப்பது. இந்தச் சந்திப்பு பெரிய குழப்பத்தை ஏற்படுத்த, தனுஷ் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில், அவரது தந்தை பிரகாஷ் ராஜ் இறந்து விடுகிறார். ஒரே நேரத்தில் ஏற்படும் காதலியின் திருமணம் மற்றும் தந்தையின் மரணம் ஷங்கரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை.

(படத்தில் ஷங்கர், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு புரட்சிகரமான மாணவனாக அறிமுகமாகி, மனநல ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இந்திய விமானப்படைக்கு பைலட்டாகி, இறுதியில் குழப்பமான சூழலில் முக்தியைச் சந்திக்கும் காட்சிகள் – கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் குழப்பமான ஆனால் உணர்வுபூர்வமான முறையில் இணைத்திருப்பது சிறப்பு).

🎼 இசைப்புயலின் பலம்

படத்தின் இரண்டாவது நாயகன் என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானைச் சொல்லலாம். பாடல்களும், பின்னணி இசையும் ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாக எடுத்துச் செல்கிறது. காதல் கதைக்கு இசைதான் உயிர் என்பதை உணர்ந்து ரஹ்மான் வழங்கிய இசை, படத்திற்கு மிகப் பெரிய பலத்தைச் சேர்க்கிறது.

🎬 நெடிய பயணம்: குறைபாடுகள் என்ன?

  • படத்தின் நீளம்: படத்தின் நீளம் சற்று அதிகம். 169 நிமிடங்கள் ஓடும் இந்த நெடிய கதை, சில இடங்களில் வேகத்தை இழந்து மெதுவாகச் செல்வது போன்ற உணர்வைத் தருகிறது.

  • தேவையற்ற காட்சிகள்: ஆங்காங்கே சில தேவையற்ற காட்சிகள் எந்த உணர்வையும் கொடுக்காமல் வந்து போகின்றன.

  • தர்க்க குறைபாடுகள்: திரைக்கதையில் சில இடங்களில் தர்க்க ரீதியான குறைபாடுகள் இருந்தாலும், குறிப்பாகக் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான தாக்கம் இந்தக் குறைகளைச் சரி செய்து விடுகிறது.

படப்பிடிப்பு முழுவதும் டெல்லியில் நடந்திருந்தாலும், கொஞ்சமும் அரசியல் நெடி கலக்காதது ஆச்சரியம். இதற்கான பாராட்டுகள் முழுவதுமாக இயக்குநர் ஆனந்த் எல். ராய்க்குத் தான் சேரும்.

ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் நீண்ட நேரம் ஓடும் படமாக இருந்தாலும், பொறுமை இழக்கச் செய்யாமல் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடுகிறது.

மொத்தத்தில், ‘தேரே இஷ்க் மே’ ஒரு லவ்லி திரைப்படம். தனுஷின் நடிப்புக்காகவே இதைப் பார்க்கலாம்.

மதிப்பெண்: 4/5

Related Posts

error: Content is protected !!