மனசை இலேசாக்கும் காதல் கதைதான் – “மழையில் நனைகிறேன்”!
அன்சன் பால், ரேபோ மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா,மாத்யூ வர்கீஸ் , அனுபமா குமார், சுஜாதா பஞ்சு , வெற்றிவேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் பலர் நடிப்பில் டி சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் மழையில் நனைகிறேன் . ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ் குமாரும் அவரது மனைவி ஸ்ரீவித்யா ராஜேஷும் தயாரித்த இப்படத்தின் நாயகி ரேபோ மோனிகா ஜான் பிகில் படத்தில் நடித்தவர். இதில் கவின் பாண்டியன் என்பவரோடு சேர்ந்து வசனம் எழுதி இருக்கிறார் இயக்குனர் விஜி .ஏ ஆர் ரகுமான் பள்ளியில் பயின்ற விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு கல்யான், படத் தொகுப்பு ஜி பி வெங்கடேஷ். சென்னையில் நடைபெறும் உலகப் படவிழாவில் திரையிடப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இப் படம் . அடுத்த மாதம் திரைக்கும் வரவிருக்கும் நிலையில், படத்தின் துண்டு முன்னோட்டத்தை (டீசர்) பத்திரிக்கையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் படத் தொகுப்பாளர் வெங்கடேஷ் மூவரும் .
ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் வேறு எந்த மதமும் பிரச்னை இல்லை என்ற வசனத்துடன் துவங்கும் அந்த சிறு முன்னோட்டத்தில், மழை பெய்யும் பின்னணியில் ஒரு இளம் காதல் ஜோடியின் காதல், நாயகனுக்கும் அவனது அப்பாவுக்குமான வாக்குவாதம், காதலன் காதலி சிணுங்கல்கள், ஒரு டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை எல்லாம் இருந்தது. போ என்ற வார்த்தையின் மூலம் வா என்று சொல்கிறாய் என்று ஒரு கவிதைப்பூர்வமான வசனமும் மணத்தது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் டி சுரேஷ் குமார், ” இது மனசை இலேசாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது.
ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது.
இன்னும் கொஞ்சம் டிப்ஸ் மாதிரி சொல்றதானா இஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும் படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கும் ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இது போன்ற காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது . அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது . படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சியும் கடைசிக் காட்சியும் மழையில் நடக்கும்.அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர். காதலும், மழையும் எல்லோருக்கும் பிடிப்பது மாதிரி எல்லோருக்கும் இந்தப் படமும் பிடிக்கும்” என்றார் .
தயாரிப்பாளர் பி. ராஜேஷ் குமார் , “படத்தின் கதையை இயக்குனர் சொன்ன விதமும் குறிப்பாக க்ளைமாக்ஸ் போர்ஷனும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் செய்தது . அதனால்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன் . சென்னை, புதுச்சேரி, அரக்கு வேலி போன்ற இடங்களில் ஷூட் செய்தோம். காதல் கதை என்றாலும் இது குடும்பத்தோடுஎல்லோரும் பார்க்க முடிகிற பார்க்க வேண்டிய படம். இது எனது முதல் படம். தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன் ” என்றார் .
அடிசினல் சேதி :
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆடை வடிவமைப்பை செய்திருப்பதோடு பாடலும் பாடி இருக்கிறாராக்கும்