32°C
விளம்பரம்
Advertisement

24 வருஷமா லீவே போடாத தேனி டீச்சர்!

admin சேலம் Published: September 9, 2016 4 நிமிட வாசிப்பு இது லேடீஸ் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



வருடம் முழுக்க ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத மாணவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல, தொடர்ந்து 24 வருடங்களாக, ஒருநாள்கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல், சென்றுகொண்டிருக்கும் ஆசிரியர் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சென்னை – கே.கே.நகரில் இயங்கிவரும் ஸ்ரீகிருஷ்ணசுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை ராமஜெயம்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர்!

teacher sep 9

‘‘இதை நான் சாதனையாக எல்லாம் நினைக்கவில்லை. மாணவர்களின் நலனில் அக்கறைக் காட்டும் ஒரு விஷயமாகக் கருதுகிறேன். எனக்குக் கல்வி போதித்த என் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நான் செய்யும் மரியாதையாகவும் பார்க்கிறேன்..’’ என்று புன்னகைக்கிறார் ராமஜெயம்.

தேனி, வடபுதுப்பட்டியை பூர்விகமாகக் கொண்ட ராமஜெயம், இங்கே 10, 11 மற்றும் 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துகிறார்.‘‘நான் லீவே போடாமல் பள்ளிக்குச் செல்வதை புதிதாக அறிபவர்கள் ‘பிரசவ லீவ்கூட எடுக்கலையா?’ என்பார்கள். என் பையன் பிறந்த பிறகுதான் நான் இந்தப் பள்ளியில் சேர்ந்தேன். முடிந்த அளவு காய்கறி, பழங்கள் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி என்றுகூட விடுப்பு எடுத்ததில்லை. அதையும் மீறி ஒருநாள் இரவு அடிவயிற்றில் பயங்கர வலி! மருத்துவமனையில் சோதித்துப் பார்த்தால், சிறுநீரகத்தில் கல் அடைப்பு. தொடர்ந்து அட்மிட் ஆகவேண்டி வருமோ என பயந்தேன். ஒரே இரவில் எனக்கு சிகிச்சை முடித்து, மறுநாள் காலை என்னை சுகமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (தற்போதைய தமிழக பா.ஜ.க&வின் தலைவர்தான்).

மற்றபடி, இந்த 24 வருடத்தில் சிறுசிறு பிரச்னைகள் வந்தபோது எல்லாம் சரியான சிகிச்சையும் தைரிய டானிக்கும் கொடுத்து என்னைப் பள்ளிக்கு அனுப்பியவர் எங்கள் குடும்ப டாக்டர் மோகன் ராம்..’’ என்கிறார் ராமஜெயம்.

விடுமுறை எடுக்கவேண்டிய அவசியத் தருணங்களை சமாளித்த கதைகளையும் அவர் சொன்னார்..‘‘என் மகன் நான்காவது படித்துக்-கொண்டிருந்தபோது அவனுக்கு அம்மை கண்டுவிட்டது. என் கணவர் பொன்ஸீ, பிஸியான பத்திரிகையாளர். அவராலும் வீட்டில் இருந்து அவனை கவனிக்க முடியவில்லை. பள்ளிக்கு போன் செய்து லீவும் சொல்லிவிட்ட நிலையில், சற்றும் எதிர்பாராதபடி ஊரிலிருந்து வந்துவிட்டார் என் மாமியார். பிறகென்ன?! அவரிடம் என் மகனை ஒப்படைத்து-விட்டு, பள்ளிக்கு ஓடினேன்..’’ என்று சிரிக்கிறார் ராமஜெயம்.

‘‘லீவு போடக் கூடாது என்பதற்காக இதுவரை நான் உறவுகளின் எந்த ஒரு நல்லது கெட்டதுகளிலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. என்னை நன்கு புரிந்துகொண்ட பலரும் இப்போது பள்ளி விடுமுறை நாட்களில்தான் குடும்ப விழாக்களை நடத்துகிறார்-கள். அப்படியே வேலை நாட்களில் வந்தாலும், முதல்நாள் மாலை ரிஸப்ஷனுக்குப் போய்விடுவேன்!’’ என்கிறார் கூலாக!

‘‘விஜய் டி.வி-யில், நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய போது, ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை அழைத்தார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பதோ பள்ளி வேலை நாளில். உடனே நான் நடிகை லட்சுமியைத் தொடர்புகொண்டு, ‘ஒருநாள் கூட விடுமுறை எடுக்காததால்தான் என்னை இதற்கு அழைக்கிறீர்கள். இதில் பங்கேற்க நான் விடுமுறை எடுப்பது அந்தப் பெருமைக்கே களங்கம் தந்துவிடுமே.. ஸாரி மேடம்!’ என்று பணிவாக கூறி விட்டேன். இன்றுவரை வருடந்தோறும் மார்ச் மாதத்தில் மறக்காமல் எனக்கு போன் செய்து, ‘இந்த வருஷமும் லீவு எடுக்கலை தானே?’ என்று கேட்டு வாழ்த்துச் சொல்கிறார் நடிகை லட்சுமி..’’ என்று மகிழ்கிறார் இந்த ஆசிரியை.

‘‘ஒருமுறை பள்ளி செல்லும் வழியில் சாக்கடைப் பள்ளத்தில் பாட்டி ஒருவர் விழுந்துவிட, நான் உதவப் போனேன். அப்போது அங்கு வந்த பெற்றோர் சிலர், ‘நாங்க பார்த்துக்கறோம்.. நீங்க ஸ்கூலுக்குப் போங்க டீச்சர்’ என என்னை அனுப்பி வைத்தார்கள். இப்படி பெற்றோர் முதல், எங்கள் பிரின்ஸிபால் லலிதா மேடம் மற்றும் சக ஆசிரியர்கள் வரை எல்லோரும் என்னைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புக் கொடுப் பதால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னை உற்சாகப்படுத்தி பாராட்டும் எங்கள் பள்ளியின் சேர்மன் எம்.ஏ.கே.ராஜகோபாலனுக்கு நன்றி சொல்லவேண்டும்!

இப்படி நான் லீவு எடுக்காமல் செல்வது புகழுக்காகவோ பாராட்டுக்காகவோ அல்ல. பள்ளிதான் என் நந்தவனம். அங்கே மாணவர்-களைப் பார்க்கும்போது, என் கவலைகள், மனஅழுத்தம் எல்லாமே பறந்து போய்விடும். மாணவர்களுக்குச் சொல்லிக்-கொடுப்-பதற்காக நான் தினம்தினம் புதுப்புது விஷயங்களை படிக்கிறேன். அதனால் புத்துணர்வு கொள்கிறேன். நாட்டு நடப்புகள், அண்மைச் செய்திகள் என்று எல்லாவற்றையும் போர் அடிக் காமல் சொல்வதால், அவர்களும் உற்சாகமாக என்னை எதிர் கொள்கிறார்கள். இத்தனை விஷயங்கள் என்னை கவர்ந்து இழுக்கும்போது, விடுமுறை எடுக்க எப்படி மனது வரும்?’’ – சிநேகமாக கேட்கிறார் ராமஜெயம் டீச்சர்.

மல்லிகை மகள் இதழில் வெளியான ஒரு நல்லாசிரியர் பற்றிய கட்டுரை..

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்