TASMAC சோதனை: ED மறுப்பு – விசாரணை ஏப்ரல் 8க்கு தள்ளிவைப்பு
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) மீது என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட் (ED மேற்கொண்ட சோதனைகளை நியாயப்படுத்தி, சட்ட நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியதாகவும், TASMAC-ன் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு விரிவான எதிர்-பிரமாணப் பத்திரத்தை மெட்ராஸ் ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 8, 2025 அன்று நடைபெற உள்ளது.
பின்னணி:
மார்ச் 6 முதல் 8, 2025 வரை சென்னையில் உள்ள TASMAC தலைமையகத்தில் ED சோதனைகளை நடத்தியது. இதன் பின்னர், மார்ச் 13 அன்று, TASMAC-ல் சுமார் 1,000 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக ED தெரிவித்தது. இந்த சோதனைகளில், பணியிட மாற்றங்கள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில குறிப்பிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக உத்தரவுகள், மற்றும் TASMAC-ல் ஒரு பாட்டிலுக்கு 10-30 ரூபாய் அதிக விலை வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக ED கூறியது. இந்த விவகாரம் TASMAC-ஐ நிர்வகிக்கும் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜி ஏற்கனவே 2023-ல் ED-யால் வேறு ஒரு பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளார்.

ED-யின் எதிர்-பிரமாணப் பத்திரம்:
ஏப்ரல் 1, 2025 iன்று, ED உதவி இயக்குநர் விகாஸ் குமார் கையொப்பமிட்ட 47 பக்க எதிர்-பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ED பின்வரும் முக்கிய கூற்றுகளை முன்வைத்துள்ளது: அதில் TASMAC தலைமையகத்தில் மார்ச் 6-8 வரை நடத்தப்பட்ட சோதனைகள், 2002-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முறையாக நடத்தப்பட்டவை என்று ED தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் TASMAC அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளை (FIRs) அடிப்படையாகக் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த FIR-கள், தமிழ்நாடு விழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) ஆல் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.சோதனைகள் இரண்டு சுயாதீன சாட்சிகள் (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள்) முன்னிலையில் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடத்தப்பட்டதாக ED வாதிட்டது.
மேலும் TASMAC ஊழியர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ED மறுத்துள்ளது. எந்தவொரு தனிப்பட்ட ஊழியரும் துன்புறுத்தல் அல்லது மனித உரிமை மீறல் குறித்து புகார் அளிக்கவில்லை என்று ED தெரிவித்துள்ளது. சோதனைகள் மூன்று நாட்கள் நீடித்தாலும், அது சட்டவிரோதமானது அல்ல என்றும், பெண் ஊழியர்களுக்கு இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் ED கூறியுள்ளது. உதாரணமாக, TASMAC பொது மேலாளர் (நிர்வாகம்) சங்கீதா தனது சொந்த விருப்பப்படி அங்கேயே தங்கியதாக ED தெரிவித்துள்ளது. மட்டுமின்றி TASMAC ஒரு பொதுத்துறை நிறுவனமாக, பெருமளவு பொது நிதியை கையாள்கிறது மற்றும் அதன் ஆண்டு வருவாய் கணிசமானது என்பதால், பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை பொது நலனை பாதுகாக்கும் என்று ED வாதிட்டுள்ளது.
இதை அடுத்து TASMAC மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்களை தாக்கல் செய்தன: அதில் ED-யின் சோதனைகள் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதால், அது கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டது. குறிப்பாக மார்ச் 6-8 சோதனைகளை சட்டவிரோதமானவை என்று அறிவிக்கக் கோரப்பட்டது. ED, TASMAC ஊழியர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. அத்துடன் , TASMAC ஊழியர்கள் 60 மணி நேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக மார்ச் 25 அன்று, நீதிபதிகள் M.S. ரமேஷ் மற்றும் N. செந்தில்குமார் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகியது. தற்போது, நீதிபதிகள் S.M. சுப்ரமணியம் மற்றும் K. ராஜசேகர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.இன்றைய விசாரணை முடிவில், ED-யின் எதிர்-பிரமாணப் பத்திரத்திற்கு பதிலளிக்க TASMAC-க்கு ஏப்ரல் 8 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இறுதி விசாரணை ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நமது கிரைம் நிருபர்


