விஜய் நடித்த பிகில் & கார்த்தி நடித்த கைதி படங்களின் வசூலை மிஞ்சியது டாஸ்மாக்!
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரை யரங்குகளில் வெளியாகி, வசூல் கணக்கு பரபரப்பாக பேசப்படுவது வழக்கம் என்ற நிலையில், சில ஆண்டுகளாக டாஸ்மாக் வசூல் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று பிகில், கைதி பட வசுலை விட டாஸ்மாக் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை வந்தால் துணிக்கடை, பட்டாசுக் கடைகள் உள்ளிட்டவைகளில் வியாபாரம் பிரதானமாக இருக்கும். இவைகளுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாகும் பொருள் மதுபானம் தான். விலைவாசி அதிகரித்தால் மக்களின் வாங்கும் தன்மை குறையும் என்றாலும், மதுபான விற்பனையில் மட்டும் விலைவாசி உயர்வால் எந்த தாக்கத்தையும் ஏற்படவில்லை. மாறாக விற்பனை அதிகரிக்கவே செய்கிறது.
அதிலும் தற்போது தமிழகத்தில் 5000 மதுக்கடைகள் 2000 மதுபான கூடங்கள் உள்ளன. மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை ஆகும். அதன்படி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்று அமைச்சர் கடந்த மாதம் பேசியிருந்தார் என்பதை பலரும் மறக்காத நிலையிலும் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மதுபானங்களை இத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும் என்று, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்யும். தமிழக அரசு நிர்ணயித்த இலைக்கை விட அதிகம் எட்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது டாஸ்மாக். இந்த, ஆண்டு விலைவாசி உயர்வு, தொழில் சுணக்கம் ஆகியவற்றால் பெரிய அளவிற்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மதுபான விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது டாஸ்மாக்.
வெள்ளிக்கிழமை அன்று 100 கோடி ரூபாய்க்கும், சனிக்கிழமை 183 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக் கிழமை 172 கோடி ரூபாய்க்கு என மூன்று நாட்களில் மொத்தம் 455 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இலக்காக 360 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டிற்கு, அக்டோபர் 22ம் தேதி பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் தங்கமணி “தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இலக்காக 360 கோடி நிர்ணயித்திருப்பதாக சொல்லப்படும் செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்தியின் மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார். விழாக்களுக்கு இலக்கு நிர்ணயித்து எந்த ஆண்டும் விற்பனை செய்யப் படுவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
எனினும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வதந்தியாகப் பரவிய தொகையைக் காட்டிலும் அதிகம் வசூல் செய்து டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 325 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு 130 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது டாஸ்மாக்.