தமிழகத்தில் இரவு ஊரடங்கு தொடக்கம் : பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் இரவு ஊரடங்கு தொடக்கம் : பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதை ஒட்டி நாட்டின் பல்வேறு போக்குவரத்து கழகங்கள் தாங்கள் இயங்கும் நேரத்தை அறிவித்துள்ளன.

நாடெங்கும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவுநேர பேருந்துகளுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அதையொட்டி பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களும் பேருந்துகளின் இயக்க நேரத்தை அறிவித்துள்ளன.

மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் கோவைக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையும் கொடைக்கானலுக்கு 5.45 மணி வரையும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வரை செல்லும் பேருந்துகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் பழனி, கரூர் மற்றும் கம்பம் வரை செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல், தேனி மற்றும் பெரியகுளத்துக்கு இரவு 8 மணி வரையும், நிலக்கோட்டைக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவிலுக்கு மாலை 5 மணி வரையும் ராமேஸ்வரம் மற்றும் தென்காசிக்கு 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலிக்கு இரவு 7 மணி வரையும் சிவகங்கை, கோவில்பட்டி மற்றும் சிவகாசிக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மதுரை அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலத்தில் இருந்து ஈரோடு, தருமபுரி மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சேலத்தில் இருந்து சென்னைக்கு அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் ருச்சி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் ருநெல்வேலியில் இருந்து மதுரை வரையிலான பேருந்துகள் அனைத்தும் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!