June 2, 2023

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணக் கட்டுப்பாடு: தமிழக அரசு உத்தரவு!

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தனியார் ஆம்புலன்ஸ் கட்டண விவரங்களை மருத்துவ மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தை கையாளுவது மனிதநேய மிக்க பணியாகவே இருந்தது. ஆனால் இந்த கொரோனாக் காலத்தில் அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் , மனம் நொந்து போய் வரும் நோயாளிகளின் உறவினர்களிடம் அநியாயமாக சில தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கட்டணத்தை வசூலிக்கின்றனர். தங்கள் உறவினர்களின் நிலைமை கண்டு செய்வதறியாமல் தவிக்கும் நோயாளிகளின் உறவினர், நண்பர்களின் இயலாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை, எளிய மக்களும் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செய்வதறியாது அதிக பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் இவ்விஷயம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று வெளியிட்ட தமிழ்நாடு அரசின் புதிய ஆணையின்படி சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், ஆக்சிஜன் சிகிச்சை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் 10 கிலோ மீட்டருக்கு 2000 ரூபாயும், வென்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் 10 கிலோ மீட்டருக்கு 4000 ரூபாயும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கி.மீ. மேல் கூடுதலாக சென்றால், 1 கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 வசூலிக்கலாம்

ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்கள் 10 கி.மீ. மேல் கூடுதலாக சென்றால் 1 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50 வசூலிக்கலாம்

அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் 10 கி.மீ. மேல் கூடுதலாக சென்றால் 1 கிலோ மீட்டருக்கு ரூபாய் 100 வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

இந்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அரசு நிர்ணயித்துள்ள இந்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.