June 1, 2023

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி!

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம் உள்ளிட்ட சின்னங்களின் பட்டியலில் தற்போது பட்டாம் பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மறவன் பட்டாம் பூச்சி (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) என்பதாகும்.

தற்போது நம் மாநில பட்டாம்பூச்சியாக இணைந்துள்ள “தமிழ் மறவன்” -க்கு போர் வீரன் என்று பொருள்படும். இது டார்க் ப்ரவுன் நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை முதன்மையாகப் பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று.

ஒரு சில இடங்களில் மட்டுமே வசிக்கக்கூடிய இந்த பட்டாம்பூச்சி, கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும்.

இதற்குதான் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, வனப்பகுதி மற்றும் வனவிலங்கு தோட்டத்துறை யின் தலைமை பாதுகாவலர் மாநில அரசிற்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, மாநில பட்டாம் பூச்சியாக “தமிழ் மறவன்”-ஐ தமிழ்நாடு அரசு மாநில அந்தஸ்து அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இறுதிச்சுற்றுக்கு தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தனர். இவை இரண்டும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டுள்ளன.

இதில் ஏராளமான சிறப்புகள் கொண்ட “தமிழ் மறவன்” இனத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அளவிலான அங்கீகரிக்கும் 5வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

முன்னதாக மகாராஷ்டிரா(ப்ளூ மோர்மன்), உத்தரகாண்ட்(காமன் பீகாக்), கர்நாடகா(சதர்ன் பேர்டு விங்ஸ்), கேரளா(மலபார் பேண்டட் பீகாக்) ஆகியவை பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து அளித்துள்ளன.