தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் – தமிழக மக்கள் பங்கே அதிகம் வேண்டும்!
பல்வேறு அரசியல் நிலைபாடுகளும், வர்க்க நிலைபாடுகளும், கொண்டவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு மனிதமாக இந்தத் திட்டம் தேவையா என்று யோசித்தால் இந்தத் திட்டத்தின் குறைபாடுகளை (ஏற்படுமென்ற) பேசவே மாட்டோம். திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வழிகளைத்தானே ஆராயவேண்டும்.
காமராசர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது குழந்தைகள் பசியாற சாப்பிடவாவது பள்ளிக்கூடம் வரட்டும் என்றுதான். பசியாறிய பின் படிக்க வைக்கலாமே என்றும். மதிய உணவு தரமற்றதாக உள்ளதாக, வாயில் வைக்க இயலாததாக உள்ளதாக, அதுபோலதான் ஊழலுடன் காலை உணவுத் திட்டமும் மாறும் என்கிறார்கள்.
திட்டங்களை அரசு அறிவிக்கிறது. செயல்படுத்துவது யார்? மக்களில் ஒருவராகிய நம்மில் ஒருவர்தானே? மேலிருந்து வரும் திட்டங்கள் கீழே மக்களுக்கு எட்டும்போது நீர்த்துப்போகிறதா? ஏன்? காரணம் யார்? நம் சுயநலம் தான். திட்டங்கள் அனைத்தையும் செயலாக்குவதில் நம் திட்டமிடாத் தன்மையும், உறுதியும்,நேர்மையில்லாப் பண்பும்தான் காரணம். சரியில்லாததை ஏன் சரியில்லை என்று கேள்வி கேட்பதும் நம் கடமைதான் என்று உணர வேண்டும்.
முன்பு பணிசெய்த பள்ளியில் இருக்கும் சத்துணவு உதவியாளர் ஒருவர் அரிசியை சரியாகக் கழுவாமல் சமைக்கிறார். மாணவர்கள் என்னிடம் கூறியபோது த.ஆ ரிடம் கூறுவதுதான் முறை என்று சொல்லியனுப்பினேன். த.ஆ அழைத்துக் கேட்டபோது, சத்துணவு உதவியாளர் ஆங்காரமாக திட்டினார் பிள்ளைகளை. மாணவர்கள் சொன்னதற்கு கேட்டுவிட்டோம் என்பதோடு த.ஆ செயல்பாடு முடிந்தது. தீர்வு? பிறகு அந்த உதவியாளரிடம் சமாதானமாக, தந்தையில்லாத அவருடைய மகனும் கூட இந்த அரசுப்பள்ளியில்தானே பயின்றார். (என்னிடம் படித்தார் உதவியாளரின் மகன்) அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்று சேர்வதில் நம் பங்கு உள்ளது. அரசின் பலன்களை பெற்றுக்கொள்ளும் நம் போன்ற அரசுப் பணியாளர்களுக்கு அதிகமாகவே பங்கு உள்ளது. தாராளமாக தண்ணீர் வசதி உள்ளபோது,அரிசியைக் களைவதில் சுத்தப்படுத்துவதில் ஆர்வம் கொள்ளலாமே என்று பேசினேன். பிறகு நான் அந்தப் பள்ளியில் இருக்கும்வரை என்னை பார்க்கும்போது சரியாதாங்க சமையல் செய்துடறேன் என்பார்.
காலை உணவுத்திட்டம் முழுமையாகச் சென்று சேர்வதில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மக்களுக்கும் பங்கு உள்ளது. காலை உணவுத்திட்டம் முறையாகச் செயல்படவில்லை என்றால், இன்றைக்கு முதல்வரின் நேரடிப் பார்வைக்கு கொண்டுசெல்ல எத்தனையோ வசதி உள்ளது. குறைகளைக் களையச் சொல்லுவோம். குழந்தைகள் பசியாறுவதுதான் முக்கியம்.