தமிழக தேர்தல் 2026: திராவிடக் கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. திமுகவும், அதிமுகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவில், தங்கள் பலத்தை நிரூபிக்க, தலா 160 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனவாம். தனித்து ஆட்சி அமைத்து, அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டாம் என்ற கணக்குத்தான் இந்தத் தொகுதிப் பங்கீட்டுக்கான அடிப்படையாக இருக்கிறது. மீதமுள்ள தொகுதிகளைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கத் தயாராக இருக்கிறார்களாம் திராவிடக் கட்சிகள். ஆனால், கூட்டணி கட்சிகள் அவ்வளவு சாதாரணமாக இதை ஏற்றுக்கொள்வார்களா? இதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!

கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றுதான் கேட்பார்கள். இது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்தத் தொகுதிப் பேரத்தில், எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாத பட்சத்தில் பெரும் அதிருப்தி வெடிக்கும். இது தேர்தல் பணிகளை நிச்சயம் பாதிக்கும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்த்து, கூட்டணிகளை இணக்கமாகக் கொண்டு செல்வது திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதிமுக – பாஜக கூட்டணி:
எடப்பாடி பழனிசாமி தரப்பு, புதிய அரசியல் கட்சிகளைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மேலும் சில கட்சிகளை உள்ளிழுத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி முறிவு: ஒரு எதிர்பார்ப்பு?
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி வெளியே வரும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. ஆனால், பாஜக தேசிய அளவில் ஒரு பலமான கட்சியாக இருப்பதால், பாஜக கூட்டணியில் இணைய பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க, மற்றொரு சுவாரஸ்யமான அரசியல் கணக்கு அதிமுகவை முன்வைத்து போடப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) அதிமுக கைகோர்க்க வேண்டும் என்று சிலர் தீவிரமாக விரும்புகின்றனர். ஆனால், இப்போதைக்கு அதற்கான சூழல் இல்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், 2026 தேர்தல் தமிழகத்தில் ஒரு விறுவிறுப்பான அரசியல் பாய்ச்சலுக்கு அடித்தளம் அமைக்கிறது. கூட்டணிகளின் பலமும், பலவீனமும், தலைவர்களின் வியூகங்களும், தொண்டர்களின் மனநிலையும் இணைந்து, அடுத்த ஆட்சியைக் தீர்மானிக்கும் என்பதை காலம் உணர்த்தும்.
நிலவளம் ரெங்கராஜன்


