சசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் வருகின்ற 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே ஜனவரி 27ந்தேதிதான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, சிறை தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார். அன்றைய நாளில், ஜெ. நினைவிடம் திறப்பதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். இதை தொடர்ந்து தற்போது அவருக்கு தற்போதைய தமிழக அரசு நினைவிடம் அமைப்பதற்கு முடிவு செய்தது. அதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் நினைவு இடத்திலேயே ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு, பிரதமர் மோடி வர வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி சென்ற முதல்வர் அதற்கான கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது அதை மோடி நிராகரித்து விட்ட நிலையில் தற்போது ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தினை 27 1 2020 புதன்கிழமை காலை 11 மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்கள்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்கும் அதே நாளில், சசிகலாவும் சிறையில் இருந்து விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.