தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அதிகளவில் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்ட வாரியாக மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு 97.95% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்து முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் 97.79 சதவீதத்துடன் திருப்பூர், மூன்றாம் இடத்தில் 97.59% பெற்று பெரம்பலூர், நான்காம் இடத்தில் 97.57% பெற்று கோவை, ஐந்தாம் இடத்தில் 97.36% பெற்று தூத்துக்குடி இடம் பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 87.30% மாணாக்கர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தது வேலூர் 89.20% , கிருஷ்ணகிரி 89.69% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளை சேர்ந்த 89.80% மாணாக்கர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99% பேரும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.08% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய சிறைவாசிகள் 90 பேரில், 79 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அறிவியல் பாட பிரிவுகளில் 96.32 சதவீத பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 81.89 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 82.11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தவிர்த்து, இயற்பியல் பாடத்தில் 97.76 சதவீத பேரும், வேதியியல் பாடத்தில் 98.31 சதவீத பேரும், உயிரியல் பாடத்தில் 98.47 சதவீத பேரும், கணிதப் பாடத்தில் 98.88 சதவீ பேரும், தாவரவியல் பாடத்தில் 98.04 சதவீத பேரும், விலங்கியல் பாடத்தில் 97.77 சதவீத பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.29 சதவீத பேரும், வணிகவியல் பாடத்தில் 96.41 சதவீத பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் 96.06 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.