லோக் ஆயுக்தா தாமதம் ; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

லோக் ஆயுக்தா தாமதம் ; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

மக்கள் நேரடி பார்வையில் நடக்கும் லோக் ஆயுக்தா விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டோ, ஐகோர்ட்டோ கேள்வி எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் லோக் ஆயுக்தா வுக்கு உள்ளது. அதனால்தான் என்னவோ சில பல மாநிலங்கள் குறிப்பாக நம் தமிழகம் அதை ஏற்படுத்த தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனிடையே லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டில் சில மாநிலங்களில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு ஊழியர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிவிடுவது வாடிக்கை. ஆனால், லோக் ஆயுக்தாவில் புகார் சென்றால் எளிதில் தப்பி விட முடியாது. அந்த அளவுக்கு நீதிமன்றங்களையும் தாண்டி வானளாவிய அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஊழலுக்கு தனி நீதிமன்றம்

இப்படி ஊழல் செய்பவர்கள் மீதான குற்றத்தை விசாரிக்க தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முதன் முதலில் திட்டமிட்டது ஸ்வீடன் நாடுதான். அதாவது 1806ல் அந்நாடு, ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த ஒரு தனி விசாரணை நீதிமன்றத்தை உருவாக்கியது.

நிர்வாக சீர்திருத்த கமிஷன்

நம் இந்தியாவில், ஜவஹர்லால் நேருதான் 1963ல் இந்த நீதி விசாரணை அமைப்பை கொண்டுவர நினைத்தார். அவரால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது.  பின்னர் 1966ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் மத்திய அரசுக்கு ஒரு சிறப்பு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், ‘‘மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டது. மேலும், பொது மக்களின் குறைகளைத் தீர்க்க லோக்பால், லோக் ஆயுக்தா என்ற 2 சிறப்பு அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறப் பட்டது. இந்த அறிக்கைதான் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர அடிகோலியது.

1968ல் லோக்பால் வரைவு மசோதா

நாடாளுமன்றத்தில் லோக்பால் என்ற சட்டத்தைக் கொண்டு வர வரைவு மசோதா 1968ல் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. 1971 முதல் 2011வரை பலமுறை பல திருத்தங்களுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்ததுதான் மிச்சம். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இந்த லோக்பால் மசோதாவுக்கு இல்லாமல் போனதும், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் மசோதாவுக்கு வாக்களிக்கும் பலர் மீதே அந்த சட்டம் பாய்ந்துவிடும் என்ற பயம்தான்.

விடிவு பிறந்தது

லோக் ஆயுக்தா மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் ராஜ்யசபைகளில் 2013 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. விசாரணை வரம்புக்குள் யார் யார்: லோக்பால் சட்டத்தின் கீழ், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கலாம்.

லோக் ஆயுக்தா

மாநில அரசுகளின் முதலமைச்சர், அமைச்சர்கள், செயலாளர்கள், உயர் அதிகாரிகள், வெளி நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், அறக்கட்டளைகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பா ளர்கள், சார்பு நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என அரசுடன் தொடர்புள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மாநில அளவிலான அமைப்பு லோக் ஆயுக்தா என இனம் பிரிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சொத்து விவரம் தாக்கல்

லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி தங்களின் சொத்து விபரம், வருமானம், கடன் போன்ற தகவல்களை அரசிடம் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் பெயர்களிலும், கட்டுப்பாட்டிலும் உள்ள சொத்துக்களும், நகைகளும், ஆபரணங்களும் அடங்கும்.

அமல்படுத்திய மாநிலங்கள்

2013 டிசம்பர் 17ம் தேதி நாடாளுமன்ற மேலவையிலும், டிசம்பர் 18ம் தேதி மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. பின்னர் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டு மத்திய அரசிதழிலும் பிரசுரிக்கப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வந்தவுடன் இதற்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வந்த மாநிலங்கள் உடனடியாக தங்கள் மாநிலங்களில் அமல்படுத்திவிட்டன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா பீஹார், குஜராத் உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தன. இறுதியாக கோவாவும் இந்த சட்டத்தை அமல்படுத்தியது.

தயங்கும் மாநிலங்கள்

தமிழ்நாடு, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன. சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆண்டுக்குள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இதுவரை இந்த மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தாமல் நம்பமுடியாத காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வருகின்றன.

முகாந்திரம் இருந்தால் பதவி விலக வேண்டும்

லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமர்வு அமைக்கப்படும். அந்த அமர்வுகளில் ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணையை நடத்துவார்கள். ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக லோக் ஆயுக்தா அமர்வு அறிவித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட அரசு ஊழியர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர் என எந்த பதவியில் இருந்தாலும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

விசாரணை எப்படி

குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்கள் இருக்கும்பட்சத்தில் லோக் ஆயுக்தா அந்த புகார் மீதான அனைத்து ஆவணங்களையும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்துக்கு அனுப்பும். அதன் பின்னர் அந்த வழக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். குற்றம் அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் வகிக்கும் பதவி உடனடியாக பறிக்கப்படும். அந்த அளவுக்கு இந்த சிறப்பு அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.
லோக் ஆயுக்தா போலீசார்

லோக் ஆயுக்தாவில் வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகளோ நியமிக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார் முழு அதிகாரத்துடன் எந்த குறுக்கீடும் இல்லாத வகையில் செயல்படுவார்கள். குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையிலும் அரசு ஊழியரின் சொத்துக்களையும், உடமைகளையும் முடக்க லோக் ஆயுக்தாவுக்கு தனி அதிகாரம் உள்ளது.

வானளாவிய அதிகாரம்

லோக் ஆயுக்தாவில் நடக்கும் விசாரணை குறித்து உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ கேள்வி எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு உள்ளது. அதனால்தான் என்னவோ தமிழகம் போன்ற ஊழல் நிறைந்த பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா என்றால் அலறுகின்றன.

ஆக ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இந்த சட்டத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்த நிலையில் அதே மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை 12 மாநிலங்கள் இந்த சட்டத்தை இயற்றவில்லை, நீதிமன்றங்களையும் அமைக்கவில்லை.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2013-ம் ஆண்டே லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, அது 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆனால், இன்னும் பெரும்பாலான மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வரவில்லை. லோக் ஆயுக்தா நீதிமன்றங்களுக்கு போதுமான நிதியை மாநில அரசுகள் ஒதுக்காததால், கட்டமைப்பு வசதிகள் இன்றி மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு விசாரிது வருகிறது. லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்பது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், லோக் ஆயுக்தா தொடர்பான சட்டத்தில் முரண்பாடுகள் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

தமிழக அரசு கூறும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை எனக் கூறிய நீதிபதிகள், ‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Posts