தமிழ் குரல் / AI Voice
தமிழக அமைச்சர்கள் என்னவோ இனி திறக்கப்படாதுன்னா படாது என்று சொல்லி வந்தாலும் ஸ்டெர்லைட் நிறுவனம் இன்று முதல் தன் ஊழியர்கள் அனைவரையும் தலைமை அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வேதாந்தா குழுமத்தால் தூத்துகுடியில் நிறுவப்பட்ட தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை ஸ்டெர்லைட். இந்த ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக குற்றம்சாட்டி வந்தனர். ஸ்டெர்லைட்-காப்பர் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கூறி தொடர் போராட்டங்களில் இறங்கினர்.
கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அதை தொடர்ந்து தமிழக அரசு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு சீல் வைத்து பூட்டியது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானத்தை எதிர்த்து வேதாந்தா குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த தனது ஊழியர்கள் அனைவரையும் இன்று முதல் தலைமை இடத்திற்கு வந்து அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் அவர்களின் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் அனுப்பிய மின்னஞ்சலில்‘‘இந்த தருணத்தை ஸ்டெர்லைட் ஆலையின் கொள்முதல், தளவாடங்கள், உற்பத்தி செயல்முறை வணிகம், மார்கெட்டிங் உள்ளிட்ட பல பணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் விரும்புகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் செய்தி தொடர்பாளர் எம். எசக்கியப்பன் ‘‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பும் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நிர்வாகம் முடிவெடுக்கும்’’ எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள டுவிட்டர் பக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகள் மற்றும் வதந்திகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பிரச்சாரம் செய்த பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலருக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த டுவிட்டர் பக்கத்தில் பெரும்பாலான ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சேர்ந்துள்ளனர் என ஸ்டெர்லை ஆலையின் மற்றொரு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

