சிபாரிசு இம்சை வேண்டாமே!

சிபாரிசு இம்சை வேண்டாமே!

புத்தகக் காட்சியில் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்கிற சிபாரிசுகளும் என்ன புத்தகம் வாங்கக் கூடாது என்கிற சிபாரிசுகளும் உலா வருகின்றன. இந்த சிபாரிசு இம்சையை இன்னும் இரண்டு வாரங்களுக்கு சகித்தேயாக வேண்டும். வேறு வழியில்லை.

உப்புமா என்றால் அலறும் கூட்டமும் உண்டு. உப்புமாவுக்கு ரசிகர் கூட்டமும் உண்டு. நாவின் ருசி ரசனைபோல மனதின் ருசி ரசனையும் நபருக்கு நபர் மாறுபடும்.

நான் இதைப் படித்தேன், எனக்குப் பிடித்தது என்றோ இதைப் படித்தேன் எனக்குப் பிடிக்கவில்லை என்றோ விமரிசிக்க எவருக்கும் உரிமையுண்டு.

படைப்பாளர்களும், பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று சொல்வது அவசியமான தகவல்.

இதைப் படித்துப் பாருங்களேன், உங்களுக்கும் பிடிக்கலாம் என்கிற மென்மையான அணுகுமுறைகளைக்கூட ஏற்கலாம்.

இதைப் படித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்கிற ரேஞ்சில் நெகடிவ் விமரிசனத்துடன் ஏதோ தங்கள் கருத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பு மாதிரி கருதிக்கொண்டு சிலர் அறிவிப்பது அறியாமையின் உச்சம்.

தன் ரசனைதான் மேம்பட்டது என்று தன் தலைக்கு தானே கிரீடம் சூட்டிக்கொண்டு திரியும் கூட்டத்தையும்.. மேதாவித்தனமென்று நினைத்து எழுதும் அவர்களின் உளறல்களையும் புறந்தள்ளி திறந்த மனதுடன் புத்தகக் காட்சிக்கு செல்லுங்கள்.

உங்கள் ரசனைக்கு நீங்கள் புத்தகங்களை வாங்குங்கள். அடுத்தவர் ரசனையை முதுகில் சுமந்துகொண்டு உள்ளே நுழையாதீர்கள்.

உங்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லையென்றால் உங்கள் குழந்தைகளை ஹோட்டல், பீச்,பார்க் அழைத்துச் செல்வதுபோல சும்மா அழைத்துச்சென்று புத்தக உலகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

ஆர்வம் உந்தப்பட்டு நல்ல வாசகர்களாக அவர்கள் உருவானால் அது அவர்களுக்கு மட்டுமல்ல..இந்தச் சமூகத்திற்கும் நல்லது.

பட்டுகோட்டை பிரபாகர்

error: Content is protected !!