இறையன்பு-விற்கு பதில் சிவ்தாஸ் மீனா – சீப் செகரட்டரி ஆகிறார்!
இமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்கிறார். நாளையுடன் இறையன்பு ஐஏஸ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய தலைமை செயலாளராகி உள்ளார் சிவ்ராஸ் மீனா.

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30 தேதியுடன் (நாளை) ஓய்வு பெறுகிறார்
இதையடுத்துபுதிய தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.
1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சீபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.
ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு அறிந்தவர். கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


