சகோதரி சுபலட்சுமி என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி!

சகோதரி சுபலட்சுமி என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி!

கோதரி சுபலட்சுமி (R. S. Subbalakshmi) என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியுமாவார். அதிலும் தனது வாழ்நாளின் தொடக்கத்தில் ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட கைம்பெண் சுப லட்சுமி தனது கல்வியால் தன் வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்ததோடு ஆயிரக்கணக்கான பெண்களை கல்வியின் பால் ஈர்க்கும் கருவியாக செயல்பட்டார்.

சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சுப்பிரமணிய அய்யர். தாயார் விசாலாட்சி. இவர்களது முதல் குழந்தையாகப் பிறந்தவர் சுபலட்சுமி. சைதாப்பேட்டையில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்றார் 1898 இல் சுபலட்சுமியின் 11 ஆவது வயதில் இவர்களது குலமுறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆனால் உடனே தனது கணவனை இழந்தார். இதனால் அவள் ஒரு கன்னி விதவையாக இருக்க விதிக்கப்பட்டாள். இருப்பினும், அவளுடைய தந்தை, அவளுடைய சித்தியின் உதவியால், அவளுக்குத் தலை மொட்டையடிப்பதைத் தவிர வேறு திட்டங்களை வைத்திருந்தார். அதாவது தங்கள் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி தன் மகளை படிக்க வைக்க முடிவு செய்து ஆங்கிலம் மற்றும் கணிதம் மூலம் தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவளுக்குக் கற்பித்த சுப்ரமணிய ஐயர், எழும்பூரில் உள்ள பிரசிடென்சி & செகண்டரி பயிற்சிப் பள்ளியில் (P&T) அவளைச் சேர்க்க முடிவு செய்தார். அதற்காக சுப்பலட்சுமியையும் மற்றொரு வேளாண் கல்லூரி பேராசிரியையின் மகளையும் தினமும் எழும்பூருக்கு அழைத்துச் செல்ல ஒரு ஜட்கா வாடகைக்கு தயார் செய்தார். ஆனால், சுப்பலட்சுமியின் ஆச்சாரமான பாட்டிக்கு அது எதுவும் இருக்காது. ஆனால் ஒரு மாமா சித்தி மற்றும் இளம் சுப்பலட்சுமிக்கு எழும்பூரில் ஒரு வீடு எடுக்க பரிந்துரைத்தார், இதனால், பள்ளிக்கு எதிரே உள்ள பீப்பல் ட்ரீ ஹவுஸ் கையகப்படுத்தப்பட்டு குடும்ப வசிப்பிடமாக மாறியது. கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் எழும்பூரிலிருந்த பிரசிடென்சி மேல்நிலை மற்றும் பயிற்சிப்பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்குதான் சிறுமிகளை மிஸ் என்று குறிப்பிடும் சூழலில் இளம் விதவையை எப்படி குறிப்பிடுவது என்ற வாதம் எழுந்தபோது தன்னை சிஸ்டர் சுப்புலக்ஷ்மி என்றழைக்கலாம் என்றார். அன்றிலிருந்து அப்படியே அழைக்கப்பட்டார்.  1905 மெட்ரிகுலேசன் தேர்வில் எல்லாப்பாடங்களிலும் முதலாவதாத் தேறினார். அதுவும் எப்படி? .சுப்பலட்சுமி 1905 இல் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியதில். இரண்டு பெண்கள் மற்றும் பதினொரு ஆண் குழந்தைகளில் ஒருவராக இருந்தார். முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ​​எல்லாப் பாடங்களிலும் அவள் டிஸ்ட்டிங்க்‌ஷன் எனப்படும் அதீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாள், .மாணவர்கள் எவரும் தேறவில்லை. மெட்ராஸ் பிரசிடென்சி திகைத்துப் போனது, ஆண்களை விட ஒரு பெண் ஸ்கோர் செய்ததை அப்போதைய சமூகம் ரசிக்கவே இல்லை.

இதை அடுத்து குடும்பத்தில் பலர் அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், சுப்ரமணிய ஐயர், சித்தி மற்றும் சுப்பலட்சுமியின் தாயார் (அதற்குள் பெண் கல்விக்கு மாறியவர்) அவளை பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் சேர்க்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில், பிரசிடென்சி கல்லூரி மட்டுமே நகரத்தில் பெண்களை அனுமதிக்கும் ஒரே நிறுவனம். ஆனால் சுப்பலட்சுமியால் பல ஆண்களுடன் படிக்க முடியவில்லை, அதனால் அவர் FA தேர்வுக்கு படிக்க ஜார்ஜ் டவுனில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட்டில் சேர்ந்தார். 1908 இல் பி. ஏ வகுப்பில் சேர்ந்து 1911 ஆம் வருடம் முதல் பிராமணக் குடும்பத்துப் பட்டதாரியாகவும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்வு பெற்றார். இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

இதன் பின் 1912 ஆம் ஆண்டு இளம் விதவைகளுக்கு கல்வியும், மறுவாழ்வும் அளிக்கக்கூடிய ‘ஸ்ரீ சாரதா ஐக்கிய சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அத்துடன் சாரதா வித்யாலயா என்ற கல்வி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார்.  இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்த ஆசிரமத்தின் ஆஸ்தான மருத்துவராகச் சேவையாற்றினார். இதனால் பல விதவைகள் பலனடைந்தனர். 1922 ஆம் ஆண்டு இந்த அமைப்புக்காக அப்போதைய அரசு 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டிக் கொடுத்தது. இந்த கட்டடத்தில் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபுவின் மனைவி லேடி வெலிங்டன் பெயரைக் கொண்டு பள்ளி ஒன்றைத் தொடங்கினார். பல்வேறு பெண்ணுரிமை இயக்கங்களில் பங்கு கொண்டார்.

சாரதா சட்டம் என்று சொல்லக் கூடிய குழந்தைகள் திருமண ஒழிப்பு சட்டம் கொண்டுவர பாடுபட்டார். அன்னி பெசன்ட் அம்மையாருடன் இணைந்து பணியாற்றியவர். சென்னை மாகாண சபையில் எம்.எல்.சி. யாக பணியாற்றினார். மொத்தத்தில் சாரதா மகளிர் சங்கம்,சாரதா வித்தியாலயம்,லேடி விலிங்டன் பள்ளி மற்றும் லேடி விலிங்டன் ஆசிரியப்பயிற்சிக்கல்லூரி ஆகிய பல நிறுவனங்களின் வழியே பெண்கல்விக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய இவர் , ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை ‘ A CHILD WIDOW’S STORY’ என்ற தலைப்பில் மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; ‘சேவைக்கு ஒரு சகோதரி’என்ற பெயருடன் எழுத்தாளர் அநுத்தமா அதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.ஆங்கில அரசு இவரது சேவையினைப் பாராட்டி ‘கேசரி ஹிந்து’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1969 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 20இல் தமது 82 வது வயதில் மறைந்தார்.

இச்சகோதரி மறைந்த நாளில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து ஆலோச்சிக்க கோருகிறோம்: இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் ஆண்களால் வடிவமைக்கப்பட்டவை. உலக வரலாறு தொடங்கி, தமிழக வரலாறுவரை எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்கள் பற்றிய செய்திகள் ஐந்து சதவீகிதம்கூட கிடையாது. ஆனால் நாம் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் சிலரும், “பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டனர். அதனால் அவர்களுக்கென்று வரலாறு இருக்க வாய்ப்பில்லை” என்ற அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர்.

வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்தே சமுகத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் போராண்மையைப் பேசும் வரலாறு, அதே காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் அனுபவித்த கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுத்த பாண்டிமாதேவியைப் பற்றிப் பேசியுள்ளதா?அதியமான் நெடுமான் அஞ்சியின் அரசவைப் புலவர், அமைச்சர், அரசியல் ஆலோசகர், அரசியல் தூதர் என்று பல பணிகளை மேற்கொண்ட ஒளவை, எந்த வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளார்?

ஜான்சி ராணி, நூர்ஜஹான் பேகம், ரஸியா பேகம், ராணி மங்கம்மா என்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெண்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய வரலாறுகள்கூட விரிவாகப் பேசப்படவில்லை. இவர்களும் பெயரளவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஆண்களின் பங்களிப்பு பேசப்பட்ட அளவுக்குப் பெண்களின் பங்களிப்பு பேசப்படவில்லை. லண்டன், பாரீஸ் நகரங்களில் வாழ்ந்துகொண்டு, அயர்லாந்து, ரஷ்யா, எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிதி திரட்டி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அனுப்பிய மேடம் பிகாஜி காமாவை எந்த வரலாற்று நூலும் பேசவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் பிடிபடும் தருணத்தில் விஷத்தை அருந்தி, தன்னை மாய்த்துக்கொண்ட ப்ரீதி லதா, பட்டமளிப்பு உரை நிகழ்த்திக்கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னரைச் சுட்டுக் கொன்ற பீனாதாஸ், சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தகர்க்கும் முயற்சியின்போது கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற கல்பனா தத், ரகசிய வானொலி ஒலிபரப்புச் சேவையில் ஈடுபட்டுச் சிறை தண்டனை அனுபவித்த உஷா மேத்தா போன்றவர்கள் எந்த வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளனர்?

பெண் கல்விக்கு வித்திட்ட பேகம் ரொக்கயா சகாவத் ஹொசைன், சாவித்திரிபாய் பூலே, பண்டித ரமாபாய் இவர்களை எத்தனைப் பேருக்குத் தெரியும்? தமிழ்நாட்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல நூறு பெண்கள் ஈடுபட்டனர். கணவனை இழந்த இளம் பெண்களுக்குக் கல்வி கொடுத்த சகோதரி சுபலட்சுமி, தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்களும் இந்திய வரலாற்றைப் பேசும் மையப் பிரதிகளில் இடம்பெறவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறுகளிலும்கூட பெண் படைப்பாளிகள், அவர்களின் படைப்புகள், அவர்களின் படைப்புத் திறன்கள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. எப்போதோ எழுதப்பட்ட வரலாற்று நூல்களே திரும்பத் திரும்ப மறு ஆக்கம் பெறுகின்றனவே தவிர, காலந்தோறும் வரலாறுகள் புதுப்பிக்கப்படுவதில்லை; விடுபட்ட செய்திகள் இணைக்கப்படுவதில்லை. நவீன சிந்தனை வளர்ச்சிகளுக்கேற்ப பாலின பேதமற்ற புதிய பார்வையுடன் வரலாறுகள் எழுதப்பட வேண்டும். நாளைய தலைமுறை பாலின பேதமற்று வளரவும் சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்ற முயற்சிகள் தேவை.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!