சினம் – விமர்சனம்!

சினம் – விமர்சனம்!

ம் நாட்டில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என, மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன்படி  நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இப்படியான சூழலில் சமூகத்தில் நடக்கும் தவறுகளை அரசின் முயற்சியால் மட்டும் தடுக்க முடியாது. மக்கள் கொஞ்சம் ரோசப்பட்டு முன் வந்து தவறுகளை தட்டி கேட்க வேண்டும்! கூடவே தண்டனையும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சினம் படத்தை வழங்கி இருக்கிறார்கள். இந்த கதையை நேர்மையான, துடிப்பான சப்- இன்ஸ்பெக்டர் வாழ்கையை பின்னணியில் சுவைபட கூற முயன்றுள்ளார் இயக்குநர் குமரவேலு.

அதாவது எஸ்.ஐ- அதிலும் அநியாயத்துக்கு ரொம்ப நல்லவராக இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட்டின் (அருண் விஜய்), ஆசை மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுகிறார். அவர் உடலருகே இன்னொரு ஆணின் சடலமும் கிடக்கிறது. இதனால் தகாத உறவால் இருவரும் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்கிறார், பாரியின் போக்கு பிடிக்காத இன்ஸ்பெக்டர். இதனால் வெகுண்டெழுந்து அவருடன் மோத, பாரி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிறகு உண்மை அறிந்து அவரிம் போலீஸ் டூட்டியும் இதே வழக்கும் வருகிறது. இதை அடுத்து நடந்தது என்ன என்பதை விவரிக்கும் கதையே சினம்.

அருண் விஜய் ஏகப்பட்ட படங்களில் போலீஸாக பார்த்திருந்தாலும் இந்த சினம் படத்தில் புதுவிதமான பாடி லேங்க்வேஜ்ஜூடன் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை கொடுத்து அந்த கேரக்டருக்கு தனி உயிர் கொடுத்து விட்டார். மனைவியின் உடலை கையில் தூக்கியபடி கதறும்போதும், குற்றவாளிகள் பற்றிய ஆதாரம் கிடைக்காமல் தவிக்கும்போதும், கடைசிக் கட்டத்தில், வெறிகொண்டு வேட்டையாடும் போதும் அருண் விஜய் பாரி வெங்கட் மட்டுமே தெரிகிறார் என்பதே மிகப் பெரிய விஷயம்.

ஹீரோயின் பாலக் லால்வாணி அறிமுக காட்சியிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார். படத்தின் பாதியிலேயே அவரது கதாப்பாத்திரம் மரணம் அடைந்தாலும், அவருடைய இறப்பு ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் பேசும் போது நெருடும் மாடுலேஷனை கவனித்திருக்கலாம்

ஹீரோவுக்கு தொல்லை கொடுக்கும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சித்து சங்கரின் கேரக்டரும் நடிப்பும் கவனம் பெறுகிறது. உண்மையான போலீஸா? அப்படின்னா?என்று கேட்கும் தோரணையிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் , மனைவியை இழந்த அருண் விஜயிடம் விசாரணை என்ற பெயரில் அவர் மனதை நோகடிக்கும் காட்சியில், படம் பார்ப்பவர்களே அவர் மீது கடும்கோபம் கொள்ளும் அளவுக்கு மனுஷன் அசத்தியிருக்கிறார். கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் காளி வெங்கட் , உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், ரேகா சுரேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மிகையில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

கோபிநாத்தின் கேமரா வ்ழியே இரவு நேரக் காட்சிகள் அவ்வளவு துல்லியமாக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு த்ரில்லர் படத்திற்கு ர்ன்ன தேவையோ அனைத்தையும் கோபிநாத வழங்கி சபாஷ் சொல்ல வைக்கிறார். ஷபீர் பின்னணி இசை தேவையான இடங்களில் தேவையான பரபரப்பை வழங்கி சினத்துக்கு பலம் கூட்டுகிறது .

ஆக.. ஆரம்ப பேராவில் சொன்னது போல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் நியாயமாக ’சினம்’ கொள்ளத் தூண்டும் கதையை, சினிமாத்தனம் அதிகமின்றி இயல்பாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஆனால் தப்பு செய்தவர்களை பழி வாங்கும் ஹீரோவின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் இன்றைய காலச் சூழலுக்குத் தேவையான கதையும் அருண் விஜய்யின் தேர்ந்த நடிப்பும் சினத்தின் மீது காதல் கொள்ள வைத்து விடுகிறது.

மார்க்  3.25/5

error: Content is protected !!