பாராளுமன்ற வளாகத்தில் நிறுவப் போகும் ’செங்கோல்’- முழு வரலாறு!

பாராளுமன்ற வளாகத்தில் நிறுவப் போகும் ’செங்கோல்’- முழு வரலாறு!

பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, புதிய பாராளுமன்றக் கட்டடத்தை திறந்துவைப்பதுடன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் `செங்கோல்’ ஒன்றை நிறுவவிருக்கிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட `செங்கோல்’ அது, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.

இதோ அந்த செங்கோல் முழு வரலாறு:

இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” என்று கேட்க, குழப்பமடைந்த நேரு, உடனடியாக பதில் கூறவில்லை. அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம்.

உடனே ராஜாஜி, ‘‘கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்” என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 – 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

அதை அடுத்து சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்து தரும்படிக் கேட்டுக்கொண்டார்.இது ஐந்தடி நீளம் கொண்டது. இதன் தலைப்பகுதியில் நீதியைக் குறிக்கும் ‘நந்தி’ காளையும் இடம்பெற்றுள்ளது.

பின்னர் ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த, `சடைச்சாமி’ என்றழைக்கப்படும் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும், மடத்தின் ஓதுவார்களும் டெல்லி போனார்கள். அவர்கள் கூடவே மங்கள இசை முழங்க மடத்து வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.

1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11:45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலிம் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுன்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து, இறை நாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்தார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயம். நேரு கையில், செங்கோலை சடைச்சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இருப்பதை இன்றும் காணலாம்

error: Content is protected !!