சுட்டெரிக்கும் வெயில், வறண்ட அருவிகள்: விடைபெறும் தென்மேற்கு பருவமழை!

சுட்டெரிக்கும் வெயில், வறண்ட அருவிகள்: விடைபெறும் தென்மேற்கு பருவமழை!

ந்திய நாட்டின் வாழ்வாதாரமாகவும், ஒட்டுமொத்த விவசாயத்தின் முதுகெலும்பாகவும் விளங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் அரபிக்கடலில் இருந்து கிளம்பி இந்திய நிலப்பரப்பைக் குளிர்விக்கும் இந்த மேகக் கூட்டங்கள், கடந்த ஜூன் 4-ஆம் தேதி கேரளாவில் தன் பயணத்தைத் தொடங்கின. ஆனால், தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலும், பருவமழை இன்னும் தீவிரமடையாமல் போக்கு காட்டி வருகிறது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் வேளையில், தென்மேற்கு பருவக்காற்று இப்போது தற்காலிகமாக தடைபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கும் வறட்சி மற்றும் எல் நினோவின் தாக்கம்

தென்மேற்கு பருவமழையின் நுழைவாயிலாகக் கருதப்படும் கேரளா மாநிலமே இந்த முறை வரலாறு காணாத மழைப் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் காரணமாக, ஜூன் மாதத்தைத் தொடர்ந்து இந்த ஜூலை மாதத்திலும் மழைக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மங்கியுள்ளன.

கேரளாவில் மழை குறைந்ததன் நேரடிப் பாதிப்பு தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குக் பெய்யாததால், நீர்நிலைகளின் வரத்து குறைந்து ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் ஒருவித வறண்ட சூழல் உருவாகி வருகிறது.

களையிழக்கும் குற்றாலம்: பாறையோடு ஒழுகும் தண்ணீர்

தென்மேற்கு பருவமழை என்றாலே நினைவுக்கு வருவது தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றால சீசன் தான். ஆனால், இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இல்லை என்பதால், வரும் நாட்களில் குற்றால சீசன் முற்றிலும் களையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூலை 20-ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை வலுப்பெறப் போவதில்லை என்று வானிலை தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, ஜூலை 18-ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் குற்றால அருவிகளில் நீர்வரத்து மிகக் கடுமையாகக் குறையும். ஆர்ப்பரித்துக் கொட்ட வேண்டிய தண்ணீர், வெறும் பாறைகளை ஒட்டி மட்டுமே மெலிதாக ஒழுகும் நிலை ஏற்படும் என்பதால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வர்த்தகர்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் மழைப் பற்றாக்குறை

இந்த ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டின் முக்கிய தென் மாவட்டங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடும் மழைப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை நம்பியிருக்கும் இந்த மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற பருவமழையை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகளுக்கு இந்தத் தற்காலிக இடைவெளி பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

கோடையை மிஞ்சும் கத்திரி வெயில்: சுட்டெரிக்கும் கடலோரப் பகுதிகள்

பருவமழை மேகங்கள் தற்காலிகமாக விலகி, பருவக்காற்று தடைபடுவதன் மிக மோசமான விளைவாக கேரளா மற்றும் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான சென்னை முதல் திருநெல்வேலி வரையிலான பகுதிகளில், கடந்த ஏப்ரல், மே மாத கோடைக் காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரிக்கப் போகிறது. வறண்ட காற்றும், மேகமூட்டமில்லாத நீல வானமும் வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால், பொதுமக்கள் வழக்கமான கோடைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ரமாபிரபா

Related Posts