சபாபதி – விமர்சனம்
சந்தானம் என்று சொன்னாலே புன்னகையைக் கொண்டு வரும் நடிகர் என்று எல்லோருக்கும் தெரியும்..ஆனால், வெறும் வார்த்தைகளால் வடை சுட்டு பிரபலமாகிய சூழலில் அவ்வப்போது மாற்றுத் திறனாளியைக் கூட கிண்டல் செய்து முகம் சுளிக்க வைத்தவரிவர் என்பதும் தெரியும். அப்பேர்பட்டவர் இந்த சபாபதி படத்தில் திக்குவாய் நாயகனாக தோன்றி தனக்கு நடிப்பு திறணுமுண்டு என்று நிரூபித்து இருப்பதற்கே ஒரு தனி பாராட்டு விழா நடத்தலாம்.
எம்.எஸ்.பாஸ்கரின் மகன் திக்குவாய் குறைப்பாடுடைய சபாபதி (சந்தானம்). அரியர்ஸை கூட ஏகப்பட்ட அட்டெம்ப்டில் ஆஜராகி பாஸானவருக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் சாவித்ரி (ப்ரீத்தி வர்மா). மீது லவ்வு. அதே சமயம் வேலை தேடி போன இடங்களில் எல்லாம் மேற்படிக் குறைப்பாட்டால் வாய்ப்பு கிடைக்கவில்லை..இதனால் டாஸ்மாக் துணையுடன் மனமுடைந்த ஒரு சூழலில் இருந்த சபாபதிக்கு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகப்பட இருந்த கோடிக்கணக்கான பணம் கொண்ட பெட்டி ஒன்று கிடைக்கிறது. அந்த பெட்டியைத் தொலைத்த அரசியல்வாதியின் ஆட்கள் அவரை தேடுகிறார்கள். அதே சமயம் அதிர்ஷ்டவசமாக கிடைத்த அந்த பல கோடிப் பணத்தை சபாபதி என்ன செய்தார்? முடிவு என்ன என்பதை கலகலப்பாக சொல்லும் திரைக்கதைதான். அதை மேக்சிமம் ரசிக்கும்படியே செய்திருக்கிறார்கள்.
சந்தானம் தனக்கு நடிக்கவும் தெரியும் என்று முதல் முறையாக கோலிவுட் ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.. வழக்கமான கவுண்டர் காமெடி அடிக்க முடியாமல் திணறினாலும், காதல் மயக்கத்தில் திரிவதும், அப்பா எம் எஸ் பாஸ்கரிடம் சேட்டை செய்யும் இடங்களிலும் கலக்குகிறார். எம் எஸ் பாஸ்கர் மொத்த படத்தின் நகைச்சுவைக்கும் தானே பொறுப்பெடுத்து கொண்டு பின்னியெடுத்திருக்கிறார். அப்பாவாக அவர் உடல்மொழியும், சந்தானத்துடன் மல்லுகட்டும் இடங்களில் தியேட்டரில் சிரிப்பு மழை. எதுத்த வீட்டு பெண்ணாக வரும் நாயகி, புகழ் எல்லோரும் ஊறுகாயக வந்து போகிறார்கள். படத்தில் ஜொலிப்பது சந்தானமும் எம் எஸ்பாஸ்கரும் மட்டுமே. வில்லன் ரோலில் வரும் சாயாஜி ஷிண்டேயும் ஆஜராகி இருக்கிறார்.
சாம் சி. எஸ்ஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு பர்ஃபெக்ட்.
இதுவரை விளம்பர படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஸ்ரீனிவாச ராவ் சந்தானம் மூலம் வழக்கமான காமெடி என்ற பெயரில் கோலிவுட்டின் எண்ணிக்கையில் ஒரு சினிமாவைக் கூட்ட நினைக்காமல் ஒரு உருப்படியான மெசெஜ் சொல்ல வேண்டும் என்று நினைத்த இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் பாஸ் மார்க வாங்கி விட்டார் என்றே சொல்லலாம்.. இரண்டாம் பாதியில் அப்படி செய்திருக்கலாம், முதல் பாதியை இப்படி கொண்டு போயிருக்கலாம் என்று சிலரை புலம்ப வைத்தாலும் சபாபதி படம் கொஞ்சம் கூட போரடிக்காமல் ரிலாக்ஸாக இருந்தது என்பதே உண்மை.
மொத்தத்தில் குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க உதவுகிறான் இந்த சபாபதி
மார்க் 3.25/5