பிரியங்காவின் மென் இந்துத்வம் காங்கிரசுக்கு நன்மைத் தருமா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

பிரியங்காவின் மென் இந்துத்வம் காங்கிரசுக்கு நன்மைத் தருமா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

காங்கிரசின் அதிரடி நம்பிக்கையான பிரியங்கா காந்தி வத்ரா இப்போது பாஜகவை அதன் வழியிலேயே சந்திப்பது என்று தீர்மானித்து விட்டார் போல! அவரது சமீபத்திய மென் இந்துத்வம் காங்கிரஸ் பழந்தலைகளுக்கு தர்மசங்கடத்தைத் தரக்கூடும். ஆனால் ராகுல் காந்திக்கும் கூட இது புதிதல்ல. தேர்தல் பிரச்சாரங்களின் போது கோவில்களுக்கு விஜயம் மேற்கொள்வதும், சடங்குகள் செய்வதும் சகஜம். இந்த அணுகுமுறை இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. நேரு கோவில்களுக்கு போவதை அதிகம் விரும்பமாட்டார். ஆனால் அந்த அணுகுமுறையை மாற்றி கோவில்கள் உட்பட பல மதங்களின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். முக்கியமாக இந்து மதத் தலைவர்கள், மடாதிபதிகளை சந்திப்பதை அவர் தவிர்த்ததில்லை. இதற்கு பின்னணியில் இருந்தது இந்துத்வம் பேசிய பாரதீய ஜன சங்கம்/பாரதீய ஜனதா கட்சியாகும். இந்திரா முதல் முறையாக பிரதமர் ஆனப்போது காங்கிரஸ்சில் பிளவு ஏற்பட்டது. அச்சமயத்தைப் பயன்படுத்தி பசுவதை உட்பட பல இந்துக்களுக்கு ஈர்ப்பான பல கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜன சங்கம் போராட்டங்களை நடத்தியது. இதை முறியடிக்க இந்திரா பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது போலவே தானும் இந்துக்களுக்கு நட்புச் சக்தி என்பதை சுட்டிக்காட்டவே தனது மென் இந்துத்வக் கொள்கைகளை நடைமுறையில் கொண்டு வந்தார். அதற்கு நல்ல பலனும் இருந்தது. பின்னர் நடந்த 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் பெரிய வெற்றியை ஈட்டினார்.

இந்திராவைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த ராஜீவ்காந்தியும் இந்துக் கோவில்களுக்கு விஜயம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். தமிழகத்திலும் பல்வேறு கோவில்களுக்கும் விஜயம் செய்ததோடு, திருவரங்கம் இராஜகோபுரம் எழுப்பியப் பிறகு நடந்த குடமுழக்கிலும் பங்கேற்றார். மேலும் ராம் ஜென்ம பூமி விவகாரத்தில் ராஜீவ் செய்த செயலால்தான் இன்று அங்கு இராமர் கோவில் சாத்தியப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் உள்ளூர் பைசலாபாத் நீதிமன்றம் பூட்டப்பட்டிருந்த வளாகத்தின் கதவுகளைத் திறக்கச் சொல்லிய போது, மேல்முறையீடு செய்யாமல் பூட்டைத் திறக்க ஆதரவளித்தார். இதனால் பாஜக தலைவர் அத்வானி இராமர் கோவில் கட்டும் இயக்கத்தைத் துவங்கி, ரத யாத்திரைச் சென்றார். பாஜக அன்றிலிருந்து தனிச் செல்வாக்கோடு இருப்பதோடு கடந்த ஏழாண்டுகளுக்கு ஆட்சியிலும் உள்ளது. இந்து வாக்காளர்களை திருப்திப்படுத்த வேண்டியத் தேவை ஷாபானு வழக்கில் இஸ்லாமிய மத குருமார்களின் கோரிக்கையை ஏற்று இஸ்லாமியப் பெண்களுக்கு மணவிலக்கு இழப்பீடு கிடைப்பதை தடுத்ததால் ஏற்பட்டது. ஆனால் 1989 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஜீவ் தோல்வியடைந்தார்.

ஆகையால் இந்துத்வ பரிவுணர்ச்சி அரசியல் இப்போது எடுபடாது என்பது தெளிவு. பாஜகவை எதிர்க்க அதன் வழியைத் தேர்வு செய்ய வலுவான தலைமையினால் மட்டுமே முடியும். எடுத்துக்காட்டாக மம்தா பானர்ஜியை சொல்லலாம். பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை பிராமணர் என அறிவித்துக்கொண்டார்; ஆட்சியையும் பிடித்தார். வெறும் 3 இடங்களை பேரவையில் பிடித்திருந்த பாஜக 70 ற்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது. அதன் அரசியல் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தவே மமதா தனது சமூகப் பின்னணியைப் பயன்படுத்தியிருக்கலாம். இதே போல பல மாநிலத் தலைவர்கள், ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு, அரவிந்த கெஜ்ரிவால் போன்றோர் வெளிப்படையாக தங்களுடைய மதப்பற்றை அரசியலில் வெளிப்படுத்தத் தவறியதில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஹனுமன் சலிசாவை சொல்லிக்காட்டி தனது மத அடையாளத்தை வெளிப்படுத்தினார். அதுவும் தேர்தல் கூட்டத்தில்!

இப்போது பிரியங்கா உ.பியில் பல கோவில்களுக்கு சென்றதோடு கூட்டங்களில் தான் நவராத்திரி விரதம் இருக்கும் தகவல்களையும் வெளிப்படுத்துகிறார். இது காங்கிரஸ்சிற்கு அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் பலனளிக்குமோ இல்லையோ பாஜக அதனை இந்து விரோதக் கட்சி என்று அழைப்பதையாவது குறைத்துக்காட்டும். பாஜக, பிரியங்காவை நேரடியாக அவரது கணவரின் மதத்தையும், தாயாரின் பிறப்பு மதத்தையும் சுட்டிக்காட்டி அவரது இந்து மதப்பற்றை கேள்விக்குட்படுத்துவது தடுக்கப்படும் என்று உ.பி காங்கிரஸார் கருதுகின்றனர். அடுத்தாண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. அது உண்மையானால் பிரியங்காவின் இந்த அணுகுமுறை ஓரளவு இழந்த செல்வாக்கை திரும்பக்கொண்டு வரலாம். அரசியலில் இறங்க மாட்டார் எனக் கருதப்பட்ட பிரியங்கா, தனது அண்ணன் ராகுலின் அரசியல் தவறுகளை சரிக்கட்ட உதவலாம். ஆனால் அண்ணனின் நிழலில் இருந்து அரசியல் செய்யவும் இயலாது. அவரது இந்திரா காந்தியை நினைவூட்டும் தோற்றம் நல்ல ஆதரவைப் பெற்றுத் தருகிறது. எனவே உ.பியின் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மாயாவதி போன்ற பெண் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் பாஜகவை தீவிரமாக எதிர்க்க பிரியங்கா எடுத்துள்ள அவதாரம் எவ்வாறு பலன் தரும் அல்லது எதிர்மறையாகப் போகும் என்பது தெரியாது. பாஜக அரசின் குடியுரிமைச் சட்டம், காஷ்மீரில் அரசமைப்பு பிரிவு 370 ஐ நீக்கியது போன்றவற்றை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் உ.பியில் கணிசமாகவுள்ள இஸ்லாமிய மக்கள் காங்கிரஸை ஆதரிக்கலாம். ஆனால் பிரியங்காவின் மென் இந்துத்துவம் இதை குறைத்து விடுமோ என்கிற அச்சமும் இல்லாமல் இல்லை. குறிப்பாக இஸ்லாமிய மக்களின் ஆதரவை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் சமஜ்வாதி கட்சி அதற்கான உத்திகளோடு இப்போதே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. காங்கிரஸ்சுடன் கூட்டணி என்றால் இந்த மென் இந்துத்வம் ஒரு நெருடலாகவே இருக்கும்.

இவை தவிர பிரியங்கா செய்யும் ஒரே சாதகமான செயல்பாடு பெண் வாக்காளர்களை குறிவைத்து உத்திகளை வகுப்பதும், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்துவதும், வாக்காளர்களில் சரிபாதியிருக்கும் பெண்கள் மத்தியில் எடுபடலாம். பிரியங்கா தனது மென் இந்துத்வப் பேச்சை பெண்கள் பொதுக்கூட்டம் ஒன்றிலேயே பேசியுள்ளார். தொடர்ந்தும் பேசலாம். ஆயினும் பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அமேதி தொகுதியில் ராகுலைத் தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஐந்தாண்டுகள் மக்களிடையே சென்று செயலாற்றியதும், பெண்கள் பிரச்சினைகளில் அதிகம் அக்கறைக்காட்டியதுமே காரணமாக அமைந்தன. பிரியங்கா இதை நினைவில் வைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை, ஆனால் மென் இந்துத்வம் அதையும் மீறி ஒலித்தால் அபஸ்வரமாகிவிடுமே?

ரமேஷ்பாபு

Related Posts

error: Content is protected !!