ரைட் – விமர்சனம்!

ரைட் – விமர்சனம்!

ளர்ந்து வரும் இந்தியாவில், தினம் தேய்கிறது பெண்களின் பாதுகாப்பும், அதன்வழி சுதந்திரமும். இரவு,பகல், வீடு, வேலை என 360 கோணத்திலும் பெண்களுக்கான அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இளமை, மூப்பு என வேறுபாடு இருப்பதில்லை. குழந்தை, குமரி என வன்முறையாளர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையொன்றை ரைட் என்ற டைட்டிலில் புதிய வடிவில் கொடுக்க முயற்சித்து ஜஸ்ட் பாஸ் ஆகி இருக்கிறார்கள்.

அதாவது போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி, லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கும் சில குண்டர்களை அமைச்சரின் மகன் ஒருவன் தனது செல்வாக்கினால் அத்துமீறி வெளியே கொண்டு செல்கிறார்.அந்நேரம், மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக இருக்க அவரது பாதுகாப்புக்காக நட்டி செல்கிறார். இன்னொரு பக்கம் தனது மகனை காணாமல் அருண் பாண்டியன் அதே காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க, எஸ்.ஐ யாக இருக்கும் மூணாறு ரமேஷ் அதை கண்டு கொள்ளாமல் விடுகிறார்.மகனைப்பற்றிய தகவல் அறிய போலீஸ் ஸ்டேஷனுக்கு மீண்டும் அருண் பாண்டியன் வர, திருமண பத்திரிகை கொடுக்க பெண் எஸ்.ஐ அக்ஷரா ரெட்டி வர, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் கணினி வழியே தெரிய வருகிறது.அதன்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல நினைத்தால் குண்டுகள் வெடிக்கும் எனவும் மூணாறு ரமேஷ் அமர்ந்திருக்கும் நாற்காலியின் அடியிலும் ஒரு வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்க அவர் எழுந்தால் குண்டு வெடிக்கும் எனவும் தெரிகிறது.அதைத் தொடர்ந்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளும் வருகிறது.மாநிலத்திற்கு பிரதமர் வரும் வேளையில் தேவையற்ற பதற்றம் வேண்டாம் என்று காவல்துறை மேலதிகாரிகள் ரகசியமாக அந்தப்பிரச்சினையை முடிக்க நினைக்கிறார்கள்.காவல் நிலையத்துக்கு குண்டு வைத்தது யார் என்பதில் ஒவ்வொருவர் மீதான சந்தேகம் திரும்ப, அது யார், ஏன் என்பதுதான் ரைட் படக் கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் நட்டி, படத்தின் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் எண்ட்ரி கொடுத்த சில நிமிடங்களிலேயே எக்ஸிட் ஆகிவிட, அதன் பிறகு தொடங்கும் கதைக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் போதே, அவருக்கும் காவல் நிலையத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று யூகித்து விட முடிகிறது.

ரைட்டர் மூணாறு ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி, புகார் தர வந்த அருண்பாண்டியன் மூவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.அறிமுக நடிகையாக வரும் அக்ஷரா ரெட்டி சேலை கட்டிக்கொண்டிருந்தாலும் போலீஸ் சீற்றத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.போலீஸ் நிலையத்திலேயே நீதிமன்றம் அமைத்து நீதிபதியாக வினோதினி நீதிபதிக்கான கண்ணியத்தையும் விட்டுவிடாமல் அதே நேரத்தில் வெடிகுண்டு பயத்தையும் நாசுக்காக காட்டிக்கொண்டு நடிப்பதெல்லாம் இதுவரை அவரிடம் காணாத நடிப்பு.

மியூசிக் டைரக்டர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை படவோட்டத்திற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக பயணித்திருக்கிறது.

முழுக்க போலீஸ் ஸ்டேசனில் நடக்கும் கதை என்பதால், காவல் நிலையத்தை தனது வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு ஷுட்டிங் நடத்தியிருக்கும் கேமராமேன் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

ஒரு போலீஸ் ஸ்டேசனில் குண்டு என்ற காமெடி சப்ஜெக்டை சீரியஸ் ஸ்டோரியாக லாஜிக்கே இல்லாத சீன்களுடன் வழங்கி இருக்கிறார் டைரக்டர்

மொத்தத்தில் ரைட் – பாதி தப்பு

மார்க் 2.25/5

Related Posts

error: Content is protected !!