ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு!- ரிசர்வ் பேங்க் கவர்னர் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு!- ரிசர்வ் பேங்க் கவர்னர் அறிவிப்பு!

ங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25 % லிருந்து 6.50% ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ ரேட் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனுக்கான வட்டி 6.24 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக உயர்கிறது. 2018ம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களுக்கு இடையே வளரும் சந்தையைக் கொண்ட பொருளாதார நாடுகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. உலகப் பொருளாதாரச் சூழல் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை, முக்கியப் பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. அதே சமயம் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது.

2023–24ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இதன்படி முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கிறோம் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதமாகவே இருக்கும். இயல்பான பருவமழை இருக்கும். சில்லறை பணவீக்கம் 2023–24 ஆண்டில் 5.3 சதவீதமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்” என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

2022 மே மாதம் கடனுக்கான வட்டி 4 சதவீதமாக இருந்த நிலையில் ஒராண்டில் 2.5 சதவீதம் உயர்ந்து தற்போது 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி வட்டியை 35 புள்ளிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்வால் வீடு, வங்கி மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

error: Content is protected !!