உக்ரைன் போர் எப்படி முடியலாம்? ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உக்ரைன் போர் எப்படி முடியலாம்?  ரமேஷ் கிருஷ்ணன் பாபு

க்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது உணர்ச்சிகரமான முடிவுதான். ஆனால் சில இதழ்கள் குறிப்பிடுவது போல அந்த நிகழ்வு உண்மையாக ஒன்றரை வருடமோ அல்லது அதற்கு மேலோ கூட ஆகலாம். தற்காலிக உறுப்பினர் தகுதி என்று ஏதேனும் வழங்கப்பட்டு ரஷ்யாவுடன் ஒரு மறைமுகப் போரை நடத்த அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் விரும்பலாம். ஆனால் அழிவு உக்ரைனுடன் நிற்காது; ரஷ்யாவிலும் நிகழலாம். எனவே, இப்போதே உக்ரைன் ஐரோப்பிய கூட்டாளிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக கூற முடியாது.

உக்ரைனின் மீது ரஷ்யாவிற்கு இருக்கும் ஒரே பயம் அது நேட்டோவில் இணைவதுதான். மீண்டும், மீண்டும் குறிப்பிடப்படும் விஷயமும் இதுதான். சரி, இந்த நேட்டோ இணைவு அவ்வளவு எளிதானதா என்றால் இல்லை. அங்கும் சில/பல சிக்கல்கள் உண்டு. நேட்டோவின் 30 உறுப்பினர்களும் ஒருமனதாக உக்ரைனை உறுப்பினராக ஏற்க வேண்டும். இருப்பதிலேயே இதுதான் பெரிய சிக்கல். ஏனெனில் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் இணைவதை விரும்பவில்லை. ஏன் நேட்டோவே கூட விரும்பவில்லை. காரணம் ரஷ்யாவுடன் மோதல் போக்கை மேற்கொள்ள விருப்பமில்லை.

இரண்டாவது முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தையும் நேட்டோவில் இணைப்பதில் பொருளும் இல்லை. நாளை அந்த நாட்டில் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ஒரு தலைவர் பதவிக்கு வந்தால் தேவையில்லாத குடைச்சலும் வரும். இவைத் தவிர பைடனும் பொருளாதாரன். நீதி, இராணுவம் போன்ற துறைகளில் உக்ரைனின் மதிப்பெண்கள் சராசரிக்கும் கீழே இருப்பதால் அதை இணைக்கத் தயங்குவதாக கூறப்படுகிறது. பிரஞ்சு அதிபர் மெக்ரான் இதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார்.

இப்போது போர் எப்படி நிகழ்கிறது, எத்தனை நாட்கள் உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியும்? ரஷ்யாவும் எத்தனை நாள் போர் செய்யும் என்பதெல்லாம் சேதாரங்களைப் பொறுத்த சங்கதிகள். அதிக உயிரழப்பை ரஷ்ய மக்களும் ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. போரினால் ஏற்படும் பின் விளைவுகளை மக்கள்தான் அனுபவிக்கப் போகிறார்கள். எனவே நீண்ட காலப் போர் சாத்தியமில்லை. இப்போதே கூட ஒருபுறம் பேச்சு வார்த்தையையும் ரஷ்யாவும், உக்ரைனும் நடத்தி வருகின்றன. ஏதோ ஒரு முடிவை அடைய முடியும் என்ற நம்பிக்கையில்தான் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.

உக்ரைன் நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்தாலும் ரஷ்யாவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எனெனில் அதனிடம் அணு ஆயுதங்கள் கணக்கில் அடங்காமல் உள்ளன. வலுவான இராணுவமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு வழங்கும் ஆற்றலும் உள்ளன. எனவே அச்சம் என்பது ஒரு காரணம். அமெரிக்காவின் செல்வாக்கு தனது புழக்கடை வரை வருவதை ரஷ்யா விரும்பவில்லை. அதுதான் உண்மையான காரணம். வேறொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். இன்றைய ரஷ்யா பழைய சோவியத் ஒன்றியத்தின் தொடர்ச்சியும் அல்ல. இராணுவ, பொருளாதார, உலக அரசியல் செல்வாக்கு போன்ற விஷயங்களில் தன்னை அப்படியொரு ஆற்றலாளராக ரஷ்யா கருதிக் கொள்வதுதான் சிக்கல். இன்றைய ரஷ்யா முதலாளித்துவ ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆனால் புடின் அதை தன் பக்கம் வளைத்து வைத்திருக்கிறார் என்பது வேறு விஷயம்! அதனால் புடின் மக்களை தொடர்ச்சியாக இம்சிக்க முடியாது. எனவே சில வெற்றிகளை கணக்கில் காட்டி விட்டு போரை அவரே முடிவிற்கு கொண்டு வர வேண்டும். அதை அவர் எப்போது, எப்படி, ஏன் செய்கிறார் என்பதுதான் ஆகப் பெரும் கேள்வி.

அனைத்திற்கும் மேலாக போர் உலகளவில் ஏற்படுத்தும் தாக்கம். இதுதான் போரின் போக்கை தீர்மானிக்கும் முக்கியக் காரணி. உலகளவில் எண்ணெய் உட்பட பல வர்த்தகங்களில் சரிவும், விலையேற்றமும் நிகழத் துவங்கி விட்டன. போர் அதிகரித்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகப் பொருளாதாரம் மேலும் மோசமடையும். எந்த நாட்டு மக்களும் போரை விரும்பவில்லை. ஏன் அரசுகளும் கூட விரும்பவில்லை. எனவே நீண்ட காலம் போரை நடத்த முடியாது.

அப்படி நடத்தினாலும் ரஷ்யாவிற்கும் -உக்ரைனிற்கும் இடையிலான போராகவே அது நிகழும். ஏனெனில் ரஷ்யாவுடனான உலக வர்த்தகம் துண்டிக்கப்பட்டு மாற்று எரிபொருள் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அது போலவே பிற வர்த்தகங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் உலகளவில் போர் பாதிப்பு குறையலாம். எனவே ரஷ்யாவின் வல்லரசு நோக்கம் எடுபடாது. அதனாலும் போர் முடிவிற்கு வரலாம். ஆக யாருக்கும் இலாபம் தராத, அழிவிற்கு வித்திடும் போர் நீண்ட நாள் நிலைக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

ரமேஷ்பாபு

Related Posts