’ராஜாமகள்’ -விமர்சனம்

’ராஜாமகள்’ -விமர்சனம்

வ்வொரு அப்பாக்களுக்கும் தன் மகள் குட்டி இளவரசியே. எல்லா மகள்களுக்கும் தன் அப்பா ஹீரோதான் என்பதை சுட்டிக்காட்ட வந்துள்ள மற்றொரு சினிமாவே ‘ராஜா மகள்’. அதிலும் தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே உரித்தானது என யார் சொன்னார்கள்? அது இப்படியானஅப்பாவைப் போன்ற ஆண்களுக்கும் உரித்தானதே என்று சொல்ல வந்தாலும் நிஜத்தை மீறிய அதீத கற்பனையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பால் கவனம் பெறுகிறது என்பதென்னவோ நிஜம்..!

செல்போன் ரிப்பேர் செய்து பிழைப்பு ஓட்டும் ஆடுகளம் முருகதாஸ், மனைவி மகளோடு வாடகை வீட்டில் வசிக்கிறார். கடையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தினாலும், தனது மகள் கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்துவிடுவார். ஆனால், அவருடைய மனைவி வெலீனா குடும்ப நிலையை புரிய வைத்து மகளை வளர்க்க வேண்டும் என்று முருகதாஸுக்கு அறிவுரை சொன்னாலும் அதை ஏற்காமல் மகளை செல்லமாக வளர்க்கிறார்.

இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் மாணவனின் பிறந்தநாளுக்காக அவனது வீட்டுக்கு போகும் சிறுமி பிரதிக்‌ஷா, ஆடம்பரமான அந்த வீட்டை போல் தனக்கும் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கேட்கிறார். தனது மகள் விரும்பியதை இல்லை என்று சொல்லி ஏமாற்ற மனம் இல்லாத முருகதாஸ், வீடு வாங்கி கொடுப்பதாக உறுதியளிக்கிறார்.

அறியாத வயதில் தெரியாமல் ஆசைப்பட்ட மகள் அதை சில நாட்களுக்கு பிறகு மறந்துவிடுவாள் என்று முருகதாஸ் நினைக்க, பிரதிக்‌ஷாவோ சொந்த வீடு ஆசையை மனதில் வளர்த்துக்கொண்டு எந்த நேரமும் அதே நினைவாகவே இருக்கிறார். வீட்டில் இருக்கும் பொருட்களுக்கான மாத தவணை கட்ட முடியாமல் கஷ்ட்டப்படும் முருகதாஸ், தனது மகளின் மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘ராஜாமகள்’ படக் கதை.

கதையின் நாயகன் ஆடுகளம் முருகதாஸ் -இதுநாள் வரை காமெடி வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ஆடுகளம் முருகதாஸ், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். என்ன தான் ஏழ்மையான வாழ்க்கையாக இருந்தாலும், பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற சராசரி தந்தையாக அமர்க்களமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கும் முருகதாஸ், ஒரு கட்டத்தில் தன்னால் முடியாது என்பதை மகளுக்கு புரிய வைக்காமல், பொய்க்கு மேல் பொய்யாக சொல்லும் காட்சிகளில் அவர் மீது கடும்கோபம் வர வைக்கிறார்.

ஆனால், கதையின் நாயகியாக பிரமிக்க வைத்திருக்கிறார் ககள் ரோலில் வரும் பிரதிக்‌ஷா. செல்ல அப்பாவின் அரவணைப்பில் வளரும் அவர் வாடகை வீடு என்றால் என்ன?, சொந்த வீடு என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டுவிட்டு, நாமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று தந்தையிடம் அப்பாவியாக கேட்கும் காட்சி, சொந்த வீடு கனவோடு வாழும் பிள்ளைகளை பிரதிபலிக்கிறது. தான் இருப்பது தனது வீடு அல்ல என்பதை தெரிந்துக்கொள்ளும் போது அவர் காட்டும் ரியாக்‌ஷன், அதே சமயம் அப்பா வீடு வாங்கிவிட்டதாக சொன்னவுடன், பள்ளியில் சக மாணவர்களிடம் பந்தா காட்டுவது என இந்த வயதில் இப்படி ஒரு நடிப்பா! என்று வியக்க வைக்கிறார்.

பிரதிக்ஷாவின் அம்மாவாகவும், முருகதாஸின் மனைவியாகவும் நடித்திருக்கும் வெலீனாவின் நடிப்பும் ஃபர்பெக்டாக இருக்கிறது. டிவி சீரியல் பாணியில் அழுது வடியாமல் அதே சமயம் எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பாங்குடன் நடந்து கொள்வதுடன் இரு கட்டத்தில் முருகதாஸின் பிள்ளைப் பாசம் புரிந்து ஒரு சிறிய வீடாவது வாங்கிவிடலாம் என்று அவருடன் இணைந்து பயணிப்பது ரசிக்க வைக்கிறது..

நிக்கி கண்ணனின் கேமரா கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் மக்கள் மனதில் பதிய வைக்கிறது. சங்கர் ரங்கராஜணனின் இசை காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கவில்லை என்றாலும், கதையை திசை திருப்பாமல் பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஹென்றி.ஐ, ஏழையாக இருந்தாலும் பிள்ளைகளை ராஜா போன்று வளர்க்க தந்தையர்கள் ஆசைப்படுவது சகஜமான ஒன்று தான். ஆனால், அதற்கான எல்லையை தாண்டும் போக்கெல்லாம் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்ற எதார்த்தத்தை புரியாமல் தகுதிக்கு மீறிய ஒரு கற்பனையை வழங்கி கவர முயன்றிருக்கிறார்..

error: Content is protected !!