பொது சேவை ஒலிபரப்பு தினமின்று!

பொது சேவை ஒலிபரப்பு தினமின்று!

தேசப்பிதா மகாத்மா காந்தி 1947-ஆம் ஆண்டு இதே நாளில் புதுதில்லி வானொலி நிலையத்தை பார்வையிட்டதை குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரிவினை காரணமாக ஹரியானாவின் குருஷேத்ராவில் தற்காலிகமாக தங்க வைக்கப் பட்டிருந்தவர் களிடையே மகாத்மா காந்தி உரையாற்றினார். இந்நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் காந்தியின் உரைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், 1947-ம் ஆண்டின் தீபாவளி நாளான நவம்பர் 12 அன்று காந்தி ஆற்றிய உரைதான் முதலும் கடைசியுமாக, அவர் அகில இந்திய வானொலியில் ஆற்றிய நேரடி உரை.

அதாவது இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளில் சுமார் 2 லட்சம் பேர், ஹரியானாவின் குருக்‌ஷேத்ரத்தில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காந்தி அந்த மக்களைச் சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அத்திட்டம் தடைபட்டது. இந்தப் பின்னணியில்தான், அகில இந்திய வானொலியின் மூலம் காந்தி அந்த மக்களிடம் உரையாற்றுவது என்று முடிவானது. அதன்படி, நவம்பர் 12 பிற்பகல் 3.30 மணியளவில் காந்தி தன்னுடைய செயலாளர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் உள்ளிட்ட குழுவினருடன் அகில இந்திய வானொலிக்கு வருகைதந்தார்.

“இது அதிசயிக்கத்தக்க ஒன்று. நான் இதன் சக்தியைக் காண்கிறேன்; அதிசயிக்கத்தக்க கடவுளின் சக்தி,” என்று வானொலியைப் பற்றி காந்தி கூறினார்.

காந்தி உரையாற்றுவதற்காக, வானொலி நிலைய அரங்கம், பிர்லா இல்லத்தில் காந்தியின் பிரார்த்தனைக் கூடத்தைப் போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. . முகாமின் மையத்தில், ஒலிபெருக்கி பொறுத்தப்பட்ட மிகப் பெரிய மர்ஃபி ரேடியோ ஒன்று நிறுவப்பட்டது. முகாமில் காந்தியின் இருப்பை உணர்த்தும் வகையில், நாற்காலி ஒன்றில் காந்தியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

“அதிகபட்ச தைரியம் மற்றும் பொறுமையுடன் இந்தத் துயரை எதிர்கொள்ள வேண்டும்” என்று அந்த மக்களிடம் வேண்டிய காந்தியின் உரை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இதுவே அகில இந்திய வானொலியின் முதலும் கடைசியுமாக காந்தியின் நேரடி உரையாக வரலாற்றில் பதிவானது.

அந்த வகையில் காந்தி ஒருமுறை மட்டுமே அகில இந்திய வானொலியில் நேரடியாக உரையாற்றியிருக்கிறார். ஆனால், பிர்லா வீட்டில் பிரார்த்தனைக்குப் பிறகான காந்தியின் உரைகள், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம் வரை, வானொலி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தன. 147 உரைகள் அடங்கிய காந்தியின் உரைகள் என்ற தனிப் பிரிவாக, அகில இந்திய வானொலி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பின்னாளில் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றியதன் 50-ம் ஆண்டு, 12 நவம்பர் 1997-ல் கொண்டாடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 12 நவம்பர் 2000-ல், இது பொது சேவை ஒலிபரப்பு தினமாகக் (‘ஜன் பிரசாரன் திவாஸ்’) கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து காந்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் நினைவாகப் பொது சேவை ஒலிபரப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது,

error: Content is protected !!