தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..! – வீடியோ
1,975 கிமீ வேகத்தில் பறந்த இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் அவர் தேஜஸ் விமானத்தில் பறந்துள்ள விடீயோ மற்றும் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி இன்று பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.’ என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், துபாய் விமான கண்காட்சியில் LCA தேஜாஸ் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்த போர் விமானமானது வலிமையான போர் விமானமாக அதன் திறனை நிரூபிக்கும் சில துணிச்சலான நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டியது.
LCA ஆனது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆல் கட்டப்பட்டது மற்றும் இது முதன்மையாக இந்திய விமானப்படைக்காக வடிவமைக்கப்பட்டது. எச்ஏஎல் தேஜஸ் விமானம் ‘லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்’ (LCA) என அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவானதாகும். இது கடற்படை போர் கப்பல்களிலிருந்த இயங்கும் திறன் கொண்டது. இந்த வகை விமானங்கள், ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அதாவது மணிக்கு 1,975 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. தேஜாஸ் விமானத்தில் அதிகபட்சமாக 4000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. இது ஒரு பைலட் ஒற்றை இன்ஜின் விமானமாகும். இந்த விமானம் அதிகபட்சமாக 13,300 கிலோ எடை கொண்டது ஆகும்.இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது