சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான “சூரத் டயமண்ட் போர்ஸ்” அலுவலகம் – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலம் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்குதான் பட்டை தீட்டப்படுகின்றன. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்துதான் வைரம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், சூரத்தில்தான் உலகின் 90 சதவிகித வைர கற்கள் வெட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் வைர கற்கள்தான், அமெரிக்க, சீன நாடுகளில் விற்கப்படுகிறது. எனவேதான், இந்தியாவின் வைர நகரம் என சூரத் அழைக்கப்பட்டு வருகிறது.
எனவே, வைரத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் பரப்பளவில் 3,400 கோடி ரூபாய் செலவில் “சூரத் டயமண்ட் போர்ஸ்” (சூரத் வைர பங்குச்சந்தை) என்கிற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது. தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடங்களை இணைக்க முதுகெலும்பு போல ஒரு மையக் கட்டடமும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அலுவலக கட்டட வளாகத்தின் மொத்த தளங்களின் பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும். இது, சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக இருக்கும் அமெரிக்காவின் பென்டகனை விட மிகப்பெரிய கட்டடமாகும். இங்கு, 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி இருக்கிறது. மேலும், இவர்கள் பாலீஷ் செய்யப்பட்ட வைரங்களை வாங்க சூரத்திற்கு வருவார்கள்.
அதேபோல, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வைரம் வாங்குபவர்கள் சூரத்தில் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய தளத்தைப் பெறுவதால், சுமார் 1.5 லட்சம் பேர் வர்த்தக வசதி மூலம் வேலை பெறுவார்கள். இதன் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே இங்கு மொத்தமுள்ள 4,700 அலுவலகங்களையும் வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கி விட்டன. இக்கட்டடத்தை டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பிறகு கட்டி முடித்திருக்கிறது.
சூரத் வைர வர்த்தக மையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நவடியா, இதுகுறித்து கூறுகையில், “முன்னதாக மும்பையில் இருந்த பல வைர வியாபாரிகள், ஏலத்திற்குப் பிறகு திறப்பு விழாவுக்கு முன்பே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றுவிட்டனர். திறப்பு விழாவிற்குப் பிறகு, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் அருகே நடைபெற உள்ள பெரிய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்” என்றார்.
சூரத் வைர வர்த்தக மையத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் காத்வி கூறுகையில், “இதுவே உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமாகும். இங்கு 4,500க்கும் மேற்பட்ட வைர வர்த்தக அலுவலகங்கள் உள்ளன. கரடுமுரடான வைரங்களின் வர்த்தகம் முதல் பாலிஷ் வைர விற்பனை வரை – இவை இரண்டும் இங்கு நடக்கும். இங்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஃபைபர் இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், 4000க்கும் மேற்பட்ட கேமராக்கள் மற்றும் அதிநவீன கட்டுப்பாட்டு அறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இக்கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இக்கட்டடம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த 80 ஆண்டுகாலமாக மிகப்பெரிய அலுவலகமாக இருந்த பென்டகனை சூரத் டயமண்ட் போர்ஸ் தற்போது முந்தி இருக்கிறது. சூரத் டயமண்ட் போர்ஸ் சூரத் வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. இது இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகவும் உள்ளது. இது வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். மேலும், நமது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.