‘ பூ சாண்டி’ – விமர்சனம்!

‘ பூ சாண்டி’ – விமர்சனம்!

ம் சக பத்திரிகையாளர் பாவை சந்திரன் (குங்குமம் இதழ் ஆசிரியராக இருந்த போது) ஒரு முறை, “ நம்மில் பலருக்கும் ‘இறப்புக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை’ பற்றி ஓர் இடைவிடாத ஆர்வமும் தேடலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இரவு வெகு நேரம் கண் விழித்துப் பார்க்கும் பேய்ப் படம், ஆவி ஆத்மா சம்பந்தமான சீரியல்களின் சாலிட் டி.ஆர்.பி. ரேட்டிங், நடுக்காட்டில் ஒற்றைப்பனை மரத்தில் பேய் என்ற (கட்டுக்) கதை, இத்யாதி இத்யாதி. இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறு கேசுகளுக்கு சரியான தீனி போடும் சகல படைப்புகளுக்கு தனி மரியாதை கிடைக்கும்” என்று சொன்னார். சீனியர் ஜர்னலிஸ்ட் பாவையார் சொன்னது உண்மை என்று நிரூபிக்க இப்போது(ம்) ரிலீஸாகி இருக்கும் படமே ‘ பூ சாண்டி’.

கதை என்னவென்றால் மலேசியாவில் பழங்கால பொருட்களை வாங்கி சேகரித்து வருபவர் அன்பு. அவருடன் நண்பர்களாக ஷங்கர் மற்றும் குரு ஆகியோர் ஆவியுடன் பேச ஆசைப்பட்டு ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். அதற்க்காக பழங்கால நாணயம் ஒன்றை வைத்து விளையாடும்போது மல்லிகா என்ற ஆவி வந்து தன்னை பற்றியும் தான் எவ்வாறு இறந்தேன் என்பது பற்றியும் கூறுகிறது. அந்த ஆவியுடன் பேச இருவர் ஆர்வம் காட்ட குரு மட்டும் இதற்கு மறுத்து அந்த மீடியமாக இருந்த நாணயத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே எறிந்துவிடுகிறார். மறுநாள் குரு மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அவர் அருகே தூக்கி எறியப்பட்ட நாணயம் கிடக்கிறது. இதன் பின்னர் என்னாச்சு? என்பதை சுவைபட சொல்லி இருக்கிறார்கள்..

குரல் வசீகரமும் உச்சரிப்பு சுத்தமாகவும் இருக்கும் மிர்ச்சி ரமணா கதையை நகர்த்திச் செல்லும் நாயகனாக மிகப் பொருத்தமாக இருக்கிறார். மல்லிகாவின் பின்னணியில் இருக்கும் மர்மம் அறிந்து அந்த பிரச்சனையை முடிக்கும் நேரத்தில் அவர் வேறு முடிவெடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.படம் முழுவதும் பதட்டப்படாமல் ஆவியுடன் பேசி அங்கேயே குடியிருக்கும் தினேஷ் கடைசி நேரத்தில் ரமணாவின் தலைவிதியையே மாற்ற நினைப்பது அதைவிட அதிர்ச்சி திருப்பம். அந்த கேரக்டருக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார் அவர்.

மாற்றுத்திறனாளியாக வரும் லோகன் நாதன் உண்மையிலேயே அப்படிதானா என்ற சந்தேகம் நமக்கு எழும் அளவுக்கு இயல்பு. கடைசிவரை பெரிய அதிர்ச்சி எதையும் காட்டிக் கொள்ளாமல் இறுதியில் தன் பிரச்சனை குறித்து பேசும் போது கண் கலங்க வைத்து விடுகிறார். கதையின் மையப்புள்ளியான மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் படத்தில் சொல்லப் படுவது போலவே சமந்தாவின் சாயலில் இருக்கிறார். முயற்சி செய்தால் தமிழ் நாட்டில் தயாராகும் படங்களிலும் அவருக்கு வாய்ப்பு காத்திருக்கிறது.

படத்தில் வரும் இன்னொரு பெண் பாத்திரமான தினேஷினியும் திருத்தமான அழகில் கவர்கிறார்.

இந்த திரில்லர் மற்றும் ஹாரர் கதைக்குள் ராஜேந்திர சோழனின் வரலாற்றையும், களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் உள்ளே வைத்து அது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் செய்து இந்த ஸ்கிரிப்டை எழுதி இருக்கும் இயக்குனர் ஜேகே விக்கியின் முயற்சி அபாரமானது. சின்ன பட்ஜெட் முயற்சியிலேயே இவ்வளவு பிரமிப்பான படத்தை அவரால் தர முடிகிறதென்றால் பெரிய பட்ஜெட்டும், முதல் நிலை நட்சத்திரங்களும் கை கொடுத்தால் பாகுபலி போன்ற முயற்சியை இவரால் உரசிப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

முகமது அலி ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். டஸ்டின் ரிதுவான் ஷா’வின் பின்னணி இசை கதையோடு நகர்ந்து நம்மையும் கதையினுள் ஒன்ற வைத்ததில் பெரும் பங்கு வகித்திருக்கிறது

பூ சாண்டி படம் முடிந்து வெளியே வரும் போது இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று யோசிக்க வைத்து விட்டார்கள்

மொத்தத்தில் பூ சாண்டி – ரியல் வாவ்

மார்க் 3 / 5

error: Content is protected !!