32°C
விளம்பரம்
Advertisement

பிரதமர் மோடி வாழ்த்து: 26 நாட்களில் 11 கிலோ உடல் எடை குறைந்த சோனம் வாங்சுக் போராட்டம் நிறைவு!

admin Published: July 24, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.

குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

நள்ளிரவில் எட்டப்பட்ட சமரசம்

நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 11 கிலோ வரை எடை குறைந்திருந்தார். டெல்லி சாப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குருகிராம் மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மத்திய அரசு பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்தாலோசித்த பிறகு, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்று லடாக் தலைவர்களின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சோனம் வாங்சுக்கை அமர வைக்க, ஜே.பி. நட்டா பானம் பருக வைத்து 26 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

“வன்முறையைத் தவிர்க்கவே இந்த முடிவு”: வாங்சுக் விளக்கம்

உண்ணாவிரதத்தை முடித்த பிறகு எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட சோனம் வாங்சுக், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர். நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் பரவுவதைத் தவிர்க்கவும், நிபந்தனைகளுடன் கூடிய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இந்த முடிவை எடுத்துள்ளேன். அமைதி மட்டுமே என் வழி; ஆதரவாளர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி வாழ்த்து & அரசின் வாக்குறுதிகள்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்த செய்தியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “சோனம் ஜி மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து பழைய உடல்நலத்தையும் எடையையும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், வன்முறையில் ஈடுபடாத மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்தும் அரசு உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மாணவர் அமைப்புகளின் அறப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகள்