செஸ் ஒலிம்பியாட் ; பிரதமர் தொடங்கி வைத்தார்!

செஸ் ஒலிம்பியாட் ; பிரதமர் தொடங்கி வைத்தார்!

மிழ்நாட்டில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது நமக்கு கிடைத்த கவுரவம் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் ந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. 188 நாடுகளைச் சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு, ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என FIDE (ஃபிடே) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் தொடங்கியது. இதற்கான, விழா இந்திரா காந்தி மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் களைகட்டியது.

தொடர்ந்து, இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி உடன் செஸ் போர்டில் காய்களை நகர்த்தி, சம்பிரதாய முறைப்படி ஆட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் விளையாட்டு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளதாக கூறினார். மேலும், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுவது, நமது நாட்டிற்கு கிடைத்த கவுரவம் என்று பெருமிதத்துடன் கூறினார். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஓர் உந்துசக்தியாகவும், வீரர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாகவும் செஸ் அமைந்துள்ளது என்றார்.

இதையடுத்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் ஜோதியை பிரதமர் மோடியிடம் முறைப்படி ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, இந்திய செஸ் சாம்பவனான விஸ்வநாதன் ஆனந்திடம் கொடுத்து, ஜோதி ஓட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் 40 நாட்கள் வலம் வரும். இறுதியாக ஜூலை 27-ம் தேதி போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு ஒலிம்பியாட் ஜோதி வந்தடையும்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது, அதன் பிறப்பிடமான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இருந்து தான், ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கும். இதேபோன்று, இனி வரும்காலங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெற்றாலும் ஜோதி ஓட்டம். செஸ் பிறப்பிடமான இந்தியாவில் இருந்து தான் தொடங்கும் என்பது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

error: Content is protected !!