பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம்: எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை

மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம். கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. எனவே, தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது நல்லதல்ல. இன்னும் இரண்டு வாரம் காத்திருந்து, சூழ்நிலையை கவனித்து முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், இதற்கு முன் கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தீவிரமடைந்த இரண்டு வாரத்துக்கு பின், கர்நாடகாவில் தொற்று அதிகரிக்க துவங்கியது. இப்போதும் அப்படி நடக்கக்கூடும். பள்ளிகளை திறக்கும் விஷயத்தில், அவசரம் வேண்டாம் என, வல்லுனர் குழு கூட அரசுக்கு அறிக்கை அளித்துள்ள நிலையில் அவசர அவசரமாக பள்ளிகளை திறக்க வேண்டாம், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பில் மத்திய மாநில அரசுகள் நிதானம் காட்ட வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை பேராசியர் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பதினெட்டு மாத காலமாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முதல் அலை கொரோனா பரவல் முடிவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்ததால் ஒரு சில மாநிலங்களில் மூடப் பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை தொட்டதால் திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன.
இதனிடையே தற்போது இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால் மீண்டும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆந்திரா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும், எய்ம்ஸ் கோவிட் பணிக்குழுவின் தலைவருமான மருத்துவர் நவீத் விக் கூறுகையில், “பள்ளிகள் திறப்பதில் மத்திய மாநில அரசுகள் அவசம் காட்டக்கூடாது. அவசர அவசரமாக பள்ளிகளை திறக்க வேண்டாம். பள்ளிக்கு செல்லும் மாணவர்களை, தடுப்பூசி செலுத்தாத தனிநபர்களாகவே கருத வேண்டும்.
பள்ளிகள் திறப்பில் சாதக, பாதகங்களை பார்க்க வேண்டும். ஆன்லைனில் படித்து வரும் மாணவர்கள் வீட்டில் விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். அதற்காக அவர்கள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க கூடாது. குழந்தைகளுக்கு நரம்பியல் அறிவாற்றல் விளைவுகள், உடல் மற்றும் மன ஆரோக்கியம் தேவை. நாம் சமநிலையை வைத்து டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 0.5%க்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் சுவாச சுகாதாரம், தூய்மை, முகமூடிகள் உறுதி செய்யப்பட வேண்டும். நம் குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்காத நிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் வழிகளில் ஆபத்து, வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற சிக்கல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.