நிலவின் மண்ணில் வளர்த்த செடிகள்: வேர்கள், இலைகள் வளரவில்லை!- நாசா தகவல்

நிலவின் மண்ணில் வளர்த்த செடிகள்: வேர்கள், இலைகள் வளரவில்லை!- நாசா தகவல்

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வளர்க்கப்பட்ட செடிகளை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதே நிலவின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அப்பல்லோ விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு, செடிகளை வளர்ப்பது என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதற்கான பணிகளில் இறங்கினர். ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள சந்திரனின் மண்ணை ஆய்வு குழுவினர் ஒதுக்கியுள்ளனர். அதனுடன், நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து உள்ளனர். அதன்பின்பு, தூய்மையான அறை ஒன்றில் அவற்றை சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் வைத்து உள்ளனர். ஊட்டச்சத்து குறைவான மண் என்பதால், தினசரி ஒரு திரவம் சேர்க்கப்பட்டு வந்துள்ளது.

2 நாள் கழித்து கவனித்தபோது, விதைகள் முளைத்து இருந்தன. இதனை கண்டு ஆய்வில் ஈடுபட்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 6 நாட்களுக்கு பின்னர் பூமியில் விளைந்த செடிகளை போன்று இந்த செடிகள் வலுவாக இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

செடிகள் மிக மெதுவாக வளர்ந்தன. வேர்களின் வளர்ச்சி தடைபட்டது. சில செடிகளில் இலைகள் கூட வளர்ச்சியடையவில்லை. சிவப்பு வண்ணத்தில் புள்ளிகளும் தென்பட்டன என நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.

விண்வெளி பகுதியில் வசித்து கொண்டே, ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய நிலையில் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலா மற்றும் செவ்வாயில் இருந்து கிடைக்க கூடிய வளங்களை பயன்படுத்தி, தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்த ஆய்வுகளின் முடிவுகள் அவசியப்படும் என்று நாசா நிர்வாகி பெல் நெல்சன் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!